search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்
    X

    மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தல்

    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் பொதுவான தகுதித் தேர்வை (நீட்) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது.

    இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தி கொடுத்த போதிலும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அந்த அரசாணையையும் ரத்து செய்தது. நீட் தேர்வு பிரச்சனையால் இன்னும் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாமல் தள்ளிப் போகிறது.

    ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    தமிழக அமைச்சர்கள் 6 பேர் கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்தனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நேற்று மீண்டும் டெல்லி  சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினர்.

    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×