search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர்கள், எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தல்
    X

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர்கள், எம்.பி.க்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தல்

    தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வற்புறுத்தினார்கள். மேலும் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புக் கான மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தமிழ்நாட்டில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் நீட் தேர்வுக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. என்றாலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் இன்னும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

    என்றாலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் குழு நேற்று 2-வது முறையாக டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து பேசினார்கள்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டி அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதியோடு 5 அமைச்சர்கள் கொண்ட குழு கடந்த 20-ந் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக நேற்று டெல்லி சென்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர், டெல்லி டிரான்ஸ்போர்ட் பவனில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணைமந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மத்திய இணை மந்திரியும் இணைந்து அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் குழுவினர், டெல்லி, அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மனு கொடுத்தனர். இதற்கு மத்திய உள்துறை மந்திரியும், தமிழகத்தின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

    மேலும், அமைச்சர்கள் குழு பாராளுமன்ற வளாக அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த சந்திப்புகளின் போது அமைச்சர்கள் குழுவுடன் சென்று இருந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என்று மத்திய மந்திரிகளை நாங்கள் சந்தித்து வலியுறுத்தி, தமிழக மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க போராடிக்கொண்டு இருக்கிறோம்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினோம். சட்டத்துறை மந்திரியையும் சந்தித்து பேசினோம். நியாயமான இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு வெற்றி பெறுவோம்.

    பொறியியல் படிப்புக்கான நீட் தேர்வு பரிசீலனையில் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி இருக்கிறார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இந்த ஓராண்டாவது விலக்கு அளிக்கப் படுமா? என்பதை நாங்கள் சொல்ல முடியாது.

    இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.

    இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணியினருடன் சென்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.



    இதுகுறித்து அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அவரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றால் மக்களுக்கு எற்படும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார். அந்த பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செ.செம்மலை எம்.பி.க்கள் மைத்ரேயன், சத்தியபாமா, அசோக்குமார் முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.



    பின்னர் இந்த சந்திப்பு குறித்து திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசின் சட்ட முன் வடிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என்று நாங்கள் சுகாதாரத்துறை மந்திரியிடம் வலியுறுத்தினோம். அதற்கு அவர், முக்கிய அதிகாரிகளிடம் பேசி நாளை (இன்று) முடிவு அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். எனவே சாதகமான முடிவாக அது அமையும் என்று நம்புகிறோம்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தற்போது டெல்லியில் உள்ளனர். குதிரை ஓடியபிறகு லாயத்தை பூட்டிய கதையாக இது உள்ளது. முன்பே அவர்கள் ஒப்புதல் பெற்றுத்தந்து இருக்க வேண்டும். ஆனால் பதவியை காப்பாற்றிக்கொள்ள காலதாமதப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி தடுத்து நிறுத்திய பொது நுழைவுத்தேர்வு அசுர அரக்கனாக மீண்டும் நுழைந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார்.

    இதுகுறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களும் மருத்துவர்களாகும் கனவை நனவாக்கும் வகையில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்தேன்.

    என்னுடைய கோரிக்கைகளை மிகவும் அக்கறையுடன் கேட்டுக்கொண்ட மத்திய மந்திரி இதுகுறித்து தங்களால் ஆன அனைத்தையும் செய்வதாகவும், தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். 
    Next Story
    ×