search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திகார் சிறையில் துன்புறுத்துவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மனு - கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு
    X

    திகார் சிறையில் துன்புறுத்துவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மனு - கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு

    திகார் சிறையில் தன்னை துன்புறுத்துவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
    புதுடெல்லி:

    திகார் சிறையில் தன்னை துன்புறுத்துவதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் நாது சிங், லலித்குமார் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இவர்களில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரையும் டெல்லி தனிக்கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது.

    சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைக்காததால், அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவர் மீது குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில், சுகேஷ் தன்னுடைய வக்கீல் குர்ப்ரீத் சிங் மூலம் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், சிறையில் பல்வேறு வகைகளில் தனக்கு மன அழுத்தம் தரப்படுவதாகவும், தன்னிடம் சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாகவும், தான் அடைக்கப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள சிறை வளாகத்தில் தன்னை போலீசார் குரூரமாக துன்புறுத்துவதால் தன்னை வேறு வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.



    மேலும் இரு சிறை அதிகாரிகள் பிற கைதிகள் முன்பு தன்னை முழுமையாக நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாகவும், அதனால் தான் மிகவும் கடுமையான வேதனைக்கும், அவமானத்துக்கும் மனஅழுத்தத்துக்கும் ஆளாகி இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் சுகேஷ் சந்திரசேகர் குறிப்பிட்டு உள்ளார்.

    தன்னை சித்ரவதை செய்யும் நோக்கத்தில் வேண்டுமென்றே தன்னை மாற்றி மாற்றி சிறையில் வெவ்வேறு அறைகளில் அடைத்ததாகவும் மனுவில் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    இந்த மனு நீதிபதி அசுதோஷ் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் மூத்த வக்கீல் அமன் லேகி ஆஜராகி வாதாடினார்.

    அப்போது அமன் லேகி, டெல்லி திகார் சிறை அதிகாரிகள், அங்கு காவல் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு போலீசாருடன் சேர்ந்து மனுதாரரை பல்வேறு வகைகளில் சித்ரவதை செய்வதாகவும், அவர் அ.இ.அ.தி.மு.க. (அம்மா) அணியை ஆதரித்ததால் அவர் உள்நோக்கத்துடன் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி அசுதோஷ் குமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. மிகவும் ஆபத்தான கைதிகளுக்கு உரிய ஆபத்தான சிறை வளாகத்தில் மனுதாரர் அடைக்கப்பட்டதற்கான காரணத்தை சிறை நிர்வாகம் கோர்ட்டுக்கு தெரிவிக்கவேண்டும். மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஆபத்தான கைதிகளுடன் ஏன் அடைக்கப்பட வேண்டும்? அவரை நிர்வாணப்படுத்துவது போன்ற கொடுமைகளை ஏன் மேற்கொள்ள வேண்டும்?

    இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் சிறை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். இவை குறித்த விரிவான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புகிறோம். குற்றச்சாட்டுகளை வெறுமனே மறுக்கும் வகையில் அமைந்த வெறும் தகவல் அறிக்கை மட்டும் போதாது. சிறைச்சாலையில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை கோர்ட்டு எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாது.

    சுகேஷ் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அனைத்தையும் கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய வேண்டும். அது கிடைக்கவில்லை என்று கூறினால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி மாநில அரசும், திகார் சிறையின் டைரக்டர் ஜெனரலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

    இந்த பிரச்சினையை கோர்ட்டு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. சிறையில் ஒருவரை துன்புறுத்துவது என்பது சட்டத்துக்கு விரோதமானது. அவர் சிறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கோர்ட்டு கேட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் அது மிகவும் தீவிரத்துடன் அணுகப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆவணங்களோ கண்காணிப்பு கேமரா பதிவுகளோ இல்லை என்றால் அந்த மனிதர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்று கருதப்படும்.

    இவ்வாறு நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறி உள்ளார்.

    பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதிக்கு ஒத்திவைத்த அவர், அதுவரை மனுதாரர் எந்த வகையிலும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார். 
    Next Story
    ×