search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் அடைப்பு: காங். எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
    X

    பெண் கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் அடைப்பு: காங். எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    பெண் கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வின்சென்ட் எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நெய்யாற்றின்கரை போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வின்சென்ட். இவரது வீடு அருகே வசிக்கும் 51 வயது பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    வின்சென்ட் எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த பெண் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வின்சென்ட் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நெய்யாற்றின் கரை ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

    அதேசமயம் வின்சென்ட் எம்.எல்.ஏ. தன்மீது கூறப்பட்டுள்ள கற்பழிப்பு புகாரை மறுத்தார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்யமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். இந்த நிலையில் அவரை கட்சி மேலிடம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது.

    வின்சென்ட் எம்.எல்.ஏ.வின் மனைவி சுபா. இவர் தன் கணவர் மீது கூறப்பட்டு உள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது கணவர் மீது கூறப்பட்டுள்ள கற்பழிப்பு புகாரில் அரசியல் சதி உள்ளது. கம்யூனிஸ்டு கட்சியினரும் இதன் பின்னணியில் உள்ளனர். திட்டம் போட்டு எனது கணவரை கைது செய்துள்ளனர். எனது கணவர் மீது குற்றம் இல்லை என்பதால் நாங்கள் அவரது பின்னால் இருப்போம்.

    புகார் கூறி உள்ள பெண் அடிக்கடி எனது கணவருக்கு போன் செய்து பேசுவார். பல முறை நான் போனில் அந்த பெண்ணிடம் பேசி உள்ளேன். எனது கணவரிடம் பேசவேண்டும் என்று அவர் கூறும்போது நானே போனை கணவரிடம் கொடுத்துள்ளேன். அப்போது எல்லாம் அந்த பெண் என் கணவர் பற்றி எந்த புகாரும் கூறியது இல்லை. இப்போது திடீரென்று அவர் புகார் கூறி உள்ளதால் அதில் சதி உள்ளது. அவரது குற்றச்சாட்டும் நம்பும்படி இல்லை. இந்த வழக்கில் எனது கணவருக்கு நீதி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் வின்சென்ட் எம்.எல்.ஏ.வை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நெய்யாற்றின்கரை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார் கூறிய அந்த பெண் தற்போது திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ. கைது பற்றி அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். வின்சென்ட் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டது எனக்கு முழு திருப்தியை தந்துள்ளது. போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது. போலீசார் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் எனக்கு நீதி கிடைக்கும் என்றார்.
    Next Story
    ×