search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் கைது
    X

    ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் கைது

    கேரளாவில் இருந்து மேலும் 6 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    சிரியா மற்றும் துருக்கியில் ஐ.எஸ். இயக்கத்தினர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரசு படைகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டு முக்கிய நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து அந்த நகரங்களை கைப்பற்ற சிரியா கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஐ.எஸ். அமைப்பில் சேர இந்தியாவில் இருந்தும் பல வாலிபர்கள் துபாய் வழியாக துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றுள்ளதாக மத்திய உளவுப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து சுமார் 22 பேர் குடும்பம், குடும்பமாக சிரியா சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிரியா மற்றும் துருக்கியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் தங்கியிருந்த ஷாஜகான் வெள்ளுவ கேண்டி என்பவரை துருக்கி நாட்டு அதிகாரிகள் பிடித்து நாடு கடத்தினர்.

    டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் உளவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் கேண்டியை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    இதில் ஷாஜகான் வெள்ளுவ கேண்டி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இவருடன் அதே பகுதியை சேர்ந்த மேலும் 6 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள். அங்கிருந்து துருக்கி நாட்டுக்கு நடந்தே சென்று ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

    நடந்து சென்றதால் துருக்கி நாட்டு அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஊருக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிரியா சென்று ஐ.எஸ்.அமைப்பில் இணைந்துள்ளனர்.

    இவர்களில் ஷாஜகான் வெள்ளுவ கேண்டி மட்டும் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் விருந்தினராக பணம் கொடுத்து தங்கியுள்ளார். இதை அறிந்த துருக்கி அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இவரை கண்காணித்து வந்துள்ளனர். இதில் ஷாஜகான் வெள்ளுவ கேண்டியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததை தொடர்ந்து அவரை பிடித்து நாடு கடத்தி உள்ளனர்.

    ஷாஜகான் வெள்ளுவ கேண்டி டெல்லி வந்து சேர்ந்ததும் அவரை கைது செய்த போலீசார் அவரின் பின்னணி பற்றி விசாரித்தபோது மேற்கண்ட தகவல்களை அறிந்து கொண்டனர்.

    கேரளாவில் இருந்து ஏற்கனவே ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்த கேரள வாலிபர்களில் 3 பேர் இறந்து விட்டதாக அவர்களின் உறவினர்களுக்கு தகவல் வந்தது. ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    இப்போது மேலும் 6 பேர் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் கேரள போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×