search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான்: டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதி
    X

    சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான்: டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதி

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று, டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதிபட கூறி இருக்கிறார்.
    பெங்களூரு:

    அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சத்திய நாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார்.

    இதன் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் சிறைத்துறையில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.



    சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது என்று அறிக்கை அளித்த பெண் அதிகாரி ரூபா, தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதாவது சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறி இருக்கிறார்.

    இதுகுறித்து டி.ஐ.ஜி. ரூபா நேற்று ‘தந்தி டி.வி.’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆய்வு நடத்த சென்றபோது சசிகலா அடைக் கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றேன். அப்போது அவருக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதை அறிந்தேன். அந்த 5 அறைகளையும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக அவர் பயன் படுத்திக்கொண்டு இருப்பதை அறிந்தேன். கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, சிறப்பு சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    சிறையில் 30 முதல் 40 கைதிகளுக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி ஒதுக்கப்பட்டு உள்ளது. கேபிள் கட்டணம் கட்டாமல் இருப்பது, ‘ரிமோட்’ வேலை செய்யாமல் இருப்பது என்பன போன்ற காரணங்களால் சில வேளைகளில் அந்த தொலைக்காட்சிகள் முறையாக செயல்படுவது இல்லை. ஆனால், சசிகலாவுக்கு என்று அவருடைய அறையில் நவீன வசதியுடன் கூடிய எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

    சசிகலாவுக்கு என்று தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் விரும்பிய உணவுகள் சமைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில வேளைகளில் சிறைக்கு வெளியே இருந்தும் அவருக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

    கைதிகளை அவர்களின் உறவினர்கள் சிறையில் உள்ள பார்வையாளர் கூடத்தில் தான் சந்தித்து பேச வேண்டும். அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 6-வது எண் கொண்ட கேமரா கைதிகளையும், 7-வது எண் கொண்ட கேமரா பார்வையாளர்களையும் படம் பிடிக்கும்.

    சிறையில் சசிகலா 13 முறை பார்வையாளர்களை சந்தித்து இருந்தாலும்கூட ஒருமுறை கூட சசிகலாவின் உருவமும், அவரை சந்தித்த பார்வையாளர்களின் உருவமும் இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை.

    பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் அறையில் சசிகலா தன்னை பார்க்க வந்தவர்களை சந்தித்து உள்ளார். இதற்காக அங்கு மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டு இருந்ததோடு, அந்த அறையின் வாசல் துணியால் ஆன திரையால் மூடப்பட்டு இருந்தது.

    சிறை விதிமுறைகளின்படி, வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கைதி சிறை சீருடையை அணிய வேண்டும். ஆனால், அவர் சிறை சீருடை அணியாமல் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து இருந்தார். சசிகலாவுக்கு தண்டனை விதித்த கோர்ட்டு அவருக்கு சிறையில் ‘ஏ’ வகுப்பு அறையை ஒதுக்க வேண்டும் என்று கூறவில்லை.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக கூறினாலும் அப்படி சிறப்பு வசதி செய்யும் போது சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு முறைப்படி தெரிவித்து அனுமதி பெற வேண்டும். ஆனால் அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. அப்படி என்றால், அவருக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் சிறப்பு வசதிகள் தான்.

    எனவே இது அப்பட்டமான சிறை விதிமீறல் ஆகும். இப்படியாக சிறை விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. நான் சசிகலா அறைக்கு சென்றபோது அவர் சாதாரண உடையில் தான் இருந்தார். கைதி உடை அணிந்து இருக்கவில்லை. என்னை பார்த்ததும் அவர் புன்முறுவல் செய்தார். நானும் புன்முறுவல் செய்துவிட்டு வந்துவிட்டேன். அவரிடம் எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

    இதற்கிடையே, டி.ஐ.ஜி. ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணியின் செயலாளர் வா.புகழேந்தி கூறி உள்ளார்.

    இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சமாக கைமாறி உள்ளது என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில், எனது பெயரும் அடிபடுகிறது. சசிகலாவுக்கு களங்கம் ஏற்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்றார்.

    இதேபோல், அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும், ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவது குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×