search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் கொடுத்தது உண்மை: சிறை அதிகாரிகள் ஒப்புதல்
    X

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் கொடுத்தது உண்மை: சிறை அதிகாரிகள் ஒப்புதல்

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
    பெங்களூரு:

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை, டெலிவிஷன் பெட்டி, தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக் கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

    இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அங்கு சோதனை நடத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கடந்த 12-ந்தேதி பரபரப்பு அறிக்கையை வழங்கினார். ஆனால் இந்த புகாரை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மறுத்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்த கர்நாடக முதல்-மந்திரி சித்த ராமையா உத்தரவிட்டார். மேலும் சத்தியநாராயணராவ், ரூபா ஆகிய 2 பேரும் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் பொதுக் கணக்கு குழு கூட்டம் அதன் தலைவர் ஆர்.அசோக் தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஆர்.அசோக் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆவார். மேலும் தற்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் உள்ளார்.

    பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள், மற்றும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 1½ மணி நேரம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றியும், சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுப்பட்ட சிறப்பு வசதிகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

    சிறையில் சசிகலாவுக்கு விசேஷ சமையல் அறையுடன் 5 தனி அறைகள் உள்பட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர் இருந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தது என்றும் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகாரி ரூபா வழங்கிய அறிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    “பெங்களூரு சிறையில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பாக 2004-ம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆண்டு கணக்கு தணிக்கை குழு(சி.ஏ.ஜி.) வழங்கிய அறிக்கையை ஏன் அமல்படுத்தவில்லை என்று, சிறைத்துறை அதிகாரிகளை வரவழைத்து விவரங்களை கேட்டோம். கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்று இருந்த தகவல்களும், டி.ஐ.ஜி. ரூபா வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மையானதுதான் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இது தொடர்பான முழு விவரங்களையும் என்னால் சொல்ல முடியாது. இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். பொதுக்கணக்கு குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு சிறைத்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன்.

    பெங்களூரு சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவியை வைக்க வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், கஞ்சா வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரைகளை ஏன் அமல் படுத்தவில்லை என்பது பற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம்.

    அந்த பரிந்துரைகளை அமல்படுத்தி இருந்தால் இந்த முறைகேடுகள் நடைபெற்று இருக்காது. இதில் சிறைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். பரிந்துரைகளை அமல்படுத்தாது ஏன்? என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். மேலும் சிறையில் நிலவும் குறைகளை சரிசெய்யும்படியும் உத்தரவிட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு பொதுக்கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் கூறினார்.
    Next Story
    ×