search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவை தினகரன் 24-ந் தேதி சந்திக்கிறார்
    X

    சசிகலாவை தினகரன் 24-ந் தேதி சந்திக்கிறார்

    பெங்களூர் சிறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க நேற்று டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வருகிற 24-ந் தேதி அவர் சசிகலாவை சந்திக்க மீண்டும் பெங்களூரு செல்கிறார்.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை ஏற்கனவே பல முறை தினகரன் சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் நேற்று அவருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக சசிகலாவை சந்திக்க வரும் தினகரனின் கார் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும். ஆனால் நேற்று சிறை வளாகத்திற்கு முன்பாகவே 2-வது சோதனை சாவடியில் அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கி அவர் நடந்து சென்றார்.

    மாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக காத்திருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும் செய்தி தொடர்பாளருமான புகழேந்தி சிறை சூப்பிரண்டு பொறுப்பு வகித்த அனிதா ராயை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவரும் அனுமதி மறுத்துவிட்டார்.

    பின்னர் சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசியும் பலன் இல்லை. அவர்கள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    இன்று சசிகலாவை தினகரன் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் உயர் மட்டக்குழு விசாரணை நடந்து வருவதால் இன்றும் அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் தினகரன் நேற்று இரவு சென்னை திரும்பி விட்டார்.

    இதுகுறித்து அவரது ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்காமல் திரும்பி சென்றது இதுவே முதல் முறையாகும்.

    சிறை விதிமுறைப்படி கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பார்வையாளர்கள் சந்திக்கலாம். அதன் அடிப்படையில் சசிகலாவை சந்திக்க டி.டி.வி தினகரனுடன் சென்றோம். எங்களை வரச்சொல்லி இருந்ததால் புறப்பட்டு சென்றோம். பிற்பகல் 3.15 மணிக்கு சிறை வளாகத்திற்கு சென்று விட்டோம். பொதுச்செயலாளர் சசிகலாவை பார்ப்பதற்கு காலை 11 மணிக்கே மனு கொடுக்கப்பட்டது. 4 மணி வரை சிறைத்துறையிடம் இருந்து அனுமதி வரவில்லை. பின்னர் பார்வை யாளர்களை போட்டோ எடுப்பதற்காக அழைத்து விட்டு காக்க வைத்தனர்.

    பார்வையாளர்கள் சந்திப்பு நேரம் மாலை 5 மணி வரை மட்டும் தான். அந்த நேரம் முடிவதற்கு சில மணி துளிகள் இருக்கும் போது இன்று அனுமதி இல்லை என்று சிறைத்துறை சார்பில் தெரிவித்தனர்.

    இதை முன்பே சொல்லி இருந்தால் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னையில் இருந்து அங்கு சென்று இருக்க மாட்டார்.

    ஜெயிலுக்கு வெளியே 1½ மணி நேரம் காக்க வைத்து அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) டி.டி.வி தினகரன், சசிகலாவை சந்திக்க மீண்டும் பெங்களூரு செல்கிறார்.

    Next Story
    ×