search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியலமைப்பை பாதுகாப்பது என் கடமை: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் பேட்டி
    X

    அரசியலமைப்பை பாதுகாப்பது என் கடமை: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் பேட்டி

    அரசியலமைப்பை பாதுகாப்பதுடன் அதன் மதிப்புகளை நிலைநிறுத்துவதும் தனது கடமை என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
    நாட்டின் 14-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றுள்ளனர். 3 லட்சத்து 34 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ள உள்ளார்.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்த்து போட்டியிட்ட மீரா குமார் உள்பட பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்நாத் கோவிந்த், “இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து இருக்கிறேன். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜனாதிபதியாக அரசியலமைப்பை பாதுகாப்பதும் அதன் மதிப்புகளை நிலைநிறுத்துவதும் எனது கடமையாகும். நாட்டு மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அத்துடன், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் வகையில், சேவையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

    நான் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என நினைக்கவில்லை. என் நோக்கமும் இது அல்ல. ஆனால் சமூகத்தற்கும் எனது நாட்டுக்கும் சேவை செய்வதற்காக என் ஆன்மா என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. ஜனாதிபதியாக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மேன்மையை பிரதிபலிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×