search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: 60,683 வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் முன்னிலை
    X

    ஜனாதிபதி தேர்தல்: 60,683 வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் முன்னிலை

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார்.
    புதுடெல்லி:

    தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் - 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

    பாராளுமன்ற வளாகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற அலுவலகங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டார்கள். 99 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மொத்தம் 4,895 வாக்குகள் பதிவானது. இதில் 776 பேர் எம்.பி.க்கள், 4,119 பேர் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

    மத்திய பிரதேச மாநில மந்திரி நரோத்தம் மிஸ்ரா ஒரு வழக்கில் தகுதி இழப்பு செய்யப்பட்டதால் அவர் ஓட்டு போடவில்லை.

    ஓட்டு பதிவு முடிந்ததும் மாநிலங்களில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. பாராளுமன்ற செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான அனுப்மிஸ்ரா மேற்பார்வையில் ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

    மொத்தம் 8 மேஜைகள் போடப்பட்டு 8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்றத்தில் வாக்களித்த வாக்குப் பெட்டிகள் எண்ணப்பட்டன

    தொடர்ந்து மாநிலங்களில் இருந்து வந்த வாக்குப்பெட்டிகள் மாநிலங்களின் ஆங்கில அகர வரிசைப்படி எண்ணப்பட்டன.

    அதன்படி முதலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், ஜார்க்கண்ட், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், கேரளா என வரிசையாக எண்ணப்பட்டன.

    24-வதாக தமிழக வாக்குகளும், கடைசியாக புதுவை வாக்குகளும் எண்ணப்படுகின்றன. மாலை 5 மணிவரை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

    ஓட்டு எண்ணிக்கையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். மீரா குமாருக்கு 22,941 வாக்குகள் பெற்றுள்ளார்.

    “பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

    அவருக்கு பா.ஜனதா கூட்டணி கட்சிகள் தவிர அ.தி.மு.க. அணிகள், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கான கட்சி, மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பிராந்திய கட்சிகளும் ஆதரவு அளித்ததால் 68 முதல் 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெருவார் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற செயலாளர் அனூப் மிஸ்ரா அதிகாரப் பூர்வமாக வெளியிடுவார்.

    25-ந்தேதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது. முன்னதாக ஓய்வு பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நடக்கிறது.

    Next Story
    ×