search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவின் 2 புதிய வீடியோவை வெளியிட கர்நாடக அரசு தடை
    X

    சசிகலாவின் 2 புதிய வீடியோவை வெளியிட கர்நாடக அரசு தடை

    பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் மேலும் 2 புதிய வீடியோக்களை வெளியிட கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    சசிகலா மேக்-அப் போடுவது போன்றும் அவர் சிறையில் இருந்து வெளியே செல்வது போன்றும் 2 வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் கன்னட தனியார் டி.வி.சேனலில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை. கர்நாடக அரசு அந்த வீடியோவை வெளியிட தடை விதித்ததால் அந்த வீடியோ வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக டி.வி. நிர்வாகத்திடம் கர்நாடக உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் பேசியதால் அந்த வீடியோ காட்சிகள் நிறுத்தப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் சென்னையில் பேட்டி அளித்த அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன், சசிகலாவின் வீடியோவை வெளியிட்ட டி.வி. நிறுவனம் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து அந்த நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் புதிய வீடியோ ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சிறை விதிமுறை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார், பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் ரவி, மைசூரு சிறைத்துறை சூப்பிரண்டு ஆனந்தரெட்டி ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

    மகளிர் சிறை கண்காணிப்பாளராக இருந்து தலைமை சிறை கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்ட அனிதாவிடம் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றனர்.

    சிறையில் வி.வி. ஐ.பி.க்கள் மற்றும் ஏ கிளாஸ் வசதிகள் பெறும் கைதிகள் யார்? அரசியல் கைதிகள் யார்? அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், கோர்ட்டு உத்தரவு பெற்று வழங்கப்படும் வசதிகள், சிறை சூப்பிரண்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டு வழங்கிய வசதிகள் பற்றி கேட்டறிந்தனர்.

    அங்குள்ள முக்கிய கோப்புகளை ஆராய்ந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆராய்ந்தனர். டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையில் கூறி இருந்த 7-வது பிளாக் மற்றும் 8-வது பிளாக்கில் உள்ள கண்காணிப்பு காமிராவையும் ஆய்வு செய்தனர்.

    அவர்கள் இன்று சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணை முடிந்தவுடன் நாளை முதல் புதன் கிழமைக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த இடைக்கால அறிக்கையை வைத்து சிறைத்துறை அதிகாரிகள் சிலர் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    உயர்மட்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்துவிட்டு சென்றபிறகு சிறையில் உள்ள கைதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. சிறையில் இருந்த கைதிகளின் வண்ண ஆடைகள், மின் அடுப்பு, மற்றும் சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய் யப்பட்டு அகற்றப்பட்டன.

    வழக்கமாக கர்நாடக சிறையில் உள்ள கைதிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் உண்டு. கடுங்காவல் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற கைதிகள் மட்டுமே சீருடை அணிய வேண்டும். மற்ற கைதிகள் சீருடை அணிய தேவையில்லை. அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய அனுமதி உண்டு.

    கோர்ட்டு விசாரணைக்கும், வீடியோ கான்பரன்ஸ் சிங் விசாரணைக்கும் கைதியை ஆஜர்படுத்தும் போது அவர்கள் வெள்ளை சீருடை அணிய அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் கைதிகள் விரும்பிய உடைகளில் இருக்கலாம்.

    தண்டனை கைதிகளுக்கு மட்டும் சிறை உணவு அனுமதிக்கப்படும். விசாரணை கைதிகளுக்கும், ‘ஏ’ கிளாஸ் கைதிகளுக்கும் வெளியில் இருந்து உணவு கொண்டுவர அனுமதி உண்டு.

    இப்படி சிறைத்துறை விதிகளின்படியே சசிகலா, இளவரசி ஆகியோர் வண்ண உடை அணிய அனுமதிக்கப்பட்டதாக கர்நாடக அ.தி. மு.க. அம்மா அணி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் பரப்பன அக்ரஹார சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சசிகலாவை பெங்களூ பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தும்கூரு அல்லது மைசூரு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தனிநபர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு வரும்போது கர்நாடக அரசின் பதிலை கோர்ட்டில் தெரிவித்து சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம் என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சிறைத்துறை புதிய கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள மேக்ரிக் இன்று பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளார். அதேபோல சிறைத்துறை புதிய டி.ஐ.ஜியாக நியமிக்கப் பட்ட ரேவண்ணா நேற்று பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் இன்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×