search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க மோடி திட்டம்?
    X

    மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க மோடி திட்டம்?

    பாதுகாப்பு துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு நிரந்தர மந்திரிகள் இல்லாத நிலையில், விரைவில் மத்திய மந்திரி சபை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பாதுகாப்பு துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு நிரந்தர மந்திரிகள் இல்லாத நிலையில், விரைவில் மத்திய மந்திரி சபை மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் பிரதமர் மோடி தலைமையில் 41 மந்திரிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர், இரண்டு முறை சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக பொறுப்பேற்றதும் அந்த துறை, நிதி மந்திரி அருண் ஜெட்லி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த அணில் தாவே காலமடைந்ததும் அந்த துறை ஹர்ஸ்வர்தன் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது, நகர்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த துறையும் காலியாகிவிடும். இதனால், பல்வேறு முக்கிய துறைகளை மற்றவர்களிடம் கூடுதல் சுமையாக கொடுக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, விரைவில் மத்திய மந்திரி சபை மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சிறப்பாக செயல்படும் சில மந்திரிகளுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கீடு செய்து விட்டு, அந்த துறைகளுக்கு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க மோடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×