search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதிமுறைகளின் அடிப்படையில்தான் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு விளக்கம்
    X

    விதிமுறைகளின் அடிப்படையில்தான் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை: ஐகோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு விளக்கம்

    குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத் உரிய விதிமுறைகளின் அடிப்படையில்தான் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாக மகாராஷ்டிர அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனைக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது.

    ஏற்கெனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தத், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    இதுவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக புனேவை சேர்ந்த பிரதீப் பலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. எந்த அடிப்படையில் சஞ்சய்தத்துக்கு முன் கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது? என்று மாநில அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் தத் விடுதலை குறித்து மகாராஷ்டிர அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், உரிய விதிமுறைகளின்படியே சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாகவும், அவருக்கு என சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நன்னடத்தை, ஒழுக்கம் மட்டுமின்றி உடற்பயிற்சி, கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றது, ஒதுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்தது உள்ளிட்ட காரணங்களால் தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக (ரெமிசன் ரிலீஸ்) அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×