search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் சசிகலாவுக்கு சலுகை காட்டிய டி.ஜி.பி. - புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்
    X

    சிறையில் சசிகலாவுக்கு சலுகை காட்டிய டி.ஜி.பி. - புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்

    பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை காட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் இதுதொடர்பான புகாரை எழுப்பிய டி.ஐ.ஜி ரூபா ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    பெங்களூரு:

    பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை காட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் இதுதொடர்பான புகாரை எழுப்பிய டி.ஐ.ஜி ரூபா ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர்(அம்மா அணி) சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

    இந்த திடுக்கிடும் தகவல் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா ராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபாவை சிறைத் துறையில் இருந்து  போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புதுறை ஆணையராக அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், ரூபாவால் குற்றம்சாட்டப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்துவந்த பொறுப்புகள் அனைத்தும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த மேகரிக் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சத்தியநாராயணா ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டி.ஜி.பி. சத்தியநாராயண ராவுக்கு பதிலாக அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும்?, அவரும் விதிமுறைகளைமீறி, லஞ்சத்துக்கு துணைபோய், வி.வி.ஐ.பி. கைதிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுப்பாரா? அல்லது, கடமையும் வாய்மையும் தவறாத ‘மிஸ்டர் கிளீன்’ அதிகாரியாக நடந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெற்ற அத்துமீறலை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×