search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி உயிரியல் பூங்காவில் 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பன்சி குரங்கு: குவியும் வாழ்த்துக்கள்
    X

    டெல்லி உயிரியல் பூங்காவில் 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பன்சி குரங்கு: குவியும் வாழ்த்துக்கள்

    டெல்லியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் பெண் சிம்பன்சி, தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. இதையடுத்து பூங்காவுக்கு வரும் ரசிகர்கள் பலர், அந்த சிம்பன்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. அந்த பூங்காவில் உள்ள விலங்குகளில் மிகவும் வயதானது, பல பத்தாண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட விலங்கு பெண் சிம்பன்சி குரங்கு ரீடா.

    இந்த குரங்கு 1964ஆம் ஆண்டில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை மகிழ்விப்பதில் சிம்பன்சி குரங்கு பெரும் பங்கு வகித்து வருகிறது.

    இந்நிலையில், சிம்பன்சி குரங்கு பூங்காவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட பூங்கா நிர்வாகம் முடிவுசெய்தது. எனவே, சிம்பன்சிக்கு பெரியளவில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் சிம்பன்சி குரங்குக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இதுதொடர்பாக பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ’’கடந்த 56 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்கா தொடங்கப்பட்டது. பூங்காவிலேயே மிக அதிக வயதுடைய விலங்காக பெண் சிம்பன்சி குரங்கு ரீடா விளங்கி வருகிறது. பார்வையாளர்களை கவர்வதிலும், பூங்காவின் வளர்ச்சியிலும் ரீடா முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

    தற்போது வயதாகி விட்டதால், முன்புபோல் செயல்பட முடியவில்லை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிம்பன்சி குரங்குக்கு பிறந்தநாள் கொண்டாட போவது மிகவும் உணர்வுபூர்வமானது. ரீடாவின் ஜோடியான மேக்ஸ், ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    ரீடாவுக்கு பிறந்த 3 குட்டிகளில் ஒன்றும் உயிருடன் இல்லை. ரீடா இதுவரை நோயில் படுத்ததில்லை. அது எப்போதும் ஆரோக்கியத்துடன் இருந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது’’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×