search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உங்கள் குறைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்: விவசாயிகளுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு
    X

    உங்கள் குறைகளை என்னிடம் கொண்டு வாருங்கள்: விவசாயிகளுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு

    மும்பை-நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் மீதான தங்களது குறைகளை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று விவசாயிகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
    மும்பை:

    வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத்வாடா மற்றும் விதர்பா மண்டலங்களை மும்பை, நாக்பூர் நகரங்களுடன் இணைத்து அவற்றின் பொருளாதார நிலையை மேம்படுத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முடிவு செய்துள்ளார்.

    இதையொட்டி, மும்பை- நாக்பூர் நகரங்களை இணைக்கும் வகையில், 700 கி.மீ. தூரத்துக்கு விரைவுச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சி பணிகளை சிவசேனா விரும்புகிறது. அதற்காக விவசாயிகளின் நலன்கள் பாதிப்படைய கூடாது. மும்பை- நாக்பூர் விரைவுச்சாலை திட்டம் தொடர்பாக நான் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் ஏற்கனவே பேசினேன்.

    அப்போது, சில இடங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் இத்திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்றும் அவரிடம் எடுத்துரைத்தேன்.

    மேலும், இத்திட்டத்துக்காக தங்களது வளமான நிலத்தை ஒப்படைக்குமாறு விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டாலோ அல்லது போதிய நஷ்ட ஈடு வழங்கவில்லை என்றாலோ, உங்கள் குறைகளை என்னிடம் கொண்டு வாருங்கள். விவசாயிகளின் தேவை பூர்த்தியாவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

    மும்பை- நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்தின் மீது என்னுடைய நிலைப்பாடும், சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒரு மந்திரியாக, ஏக்நாத் ஷிண்டே தீவிர சிவசேனா ஆதரவாளர்.

    மும்பை- நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைபாடுகளை புரிந்து கொண்டு, அரசின் கொள்கைகளை ஏற்று விவசாயிகள் திருப்தி அடைந்தால் மட்டுமே அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெளிவாக ஏக்நாத் ஷிண்டேக்கு நான் அறிவுரை வழங்கி இருக்கிறேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
    Next Story
    ×