search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு, சுமார் 12 லட்சம் பேர் பாதிப்பு
    X

    அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு, சுமார் 12 லட்சம் பேர் பாதிப்பு

    அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது, மேலும் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 59 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து நிலைமை முன்னேற்றம் இருந்த போதும் காசிரங்கா தேசிய பூங்கா நீரில் மூழ்கியதில் 70 விலங்குகள் உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள தகவல்கலில் மாநிலத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 1,795 கிராமங்களில் வசிக்கும் 11,93,458 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீமாஜி, பிஸ்வனாத், லகிம்பூர், சோனித்பூர், தர்ராங், நால்பரி, பர்பேட்டா, பொங்கய்கான், சிர்ராங், கொக்ரஹார், துபுரி, சோத்புர் சல்மாரா, கோலோபாரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.



    வெள்ளத்தில் மொத்தம் 66,516 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 25,000 பேர் வெவ்வேறு மாவட்டங்களில் அரசாங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 129 மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   



    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், நிவாரண உதவிகளும் தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாதிக்ப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் மக்கள் தங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
    Next Story
    ×