search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரியால் பா.ஜ.க. அரசு மீது குஜராத் மக்கள் கடும் அதிருப்தி
    X

    ஜி.எஸ்.டி. வரியால் பா.ஜ.க. அரசு மீது குஜராத் மக்கள் கடும் அதிருப்தி

    மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, மாட்டு இறைச்சி விவகாரம் போன்றவற்றால் குஜராத் மக்கள் பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    அகமதாபாத்:

    பா.ஜனதாவுக்கு அதிக செல்வாக்கு உள்ள மாநிலங்களில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1990-ம் ஆண்டு முதன் முதலாக பா.ஜனதா, ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது.

    அதன் பிறகு ஒரு தடவை மட்டும் காங்கிரஸ் இங்கு ஆட்சிக்கு வந்தது. மற்ற காலங்களில் எல்லாம் பா.ஜனதாவே அங்கு ஆட்சியில் இருந்து வருகிறது.



    பிரதமர் மோடி இந்த மாநிலத்தில் தொடர்ந்து 12½ ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவர் பிரதமர் ஆகி விட்டதால் அவரை தொடர்ந்து ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரி ஆனார். அவர் மீது அதிருப்தி ஏற்பட்டதால் அவரை மாற்றி விட்டு விஜய் ரூபானியை முதல்-மந்திரி ஆக்கினார்கள்.

    பிரதமர் மோடி இங்கிருந்து சென்ற பிறகு குஜராத் பா.ஜ.க. ஆட்சி மீது பல்வேறு வகையிலும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.

    பா.ஜனதாவுக்கு இங்கு பட்டேல் மற்றும் தலித் சமூகத்தினர் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்போது இந்த சமூகத்தினரே ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரஸ் ஓரளவு வெற்றியை பெற்றது. பா.ஜனதாவிடம் இருந்த கிராம பஞ்சாயத்துகள் பலவற்றை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜனதாவுக்கு பல்வேறு வகையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

    குஜராத்தில் 15 சதவீதம் பட்டேல் சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் முக்கியமான தொழில் வியாபாரம். இவர்கள் ஜவுளி தொழில், வைரம் பட்டை தீட்டும் தொழில் மற்றும் பல்வேறு மொத்த வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்த சமூகத்தினரின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அப்போதே அவர்கள் பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்தனர்.

    மேலும் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு ஹிருத்திக் பட்டேல் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இதனாலும் இந்த சமூகத்தினர் பா.ஜனதா மீது அதிருப்தியிலேயே இருந்து வந்தனர்.



    இப்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியும் இவர்களை கடுமையாக பாதித்துள்ளது. ஜவுளி தொழிலுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வைரம் பட்டை தீட்டும் தொழிலுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 சதவீத தொழில் வரி உள்ளது. வைரத்துக்கு தனியாக 0.25 சதவீத வரி உள்ளது. இந்த வரி விகிதத்தால் ஜவுளி, வைர தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய அரசு மீது அவர்கள் கோபம் அடைந்துள்ளனர். மத்திய அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சனிக்கிழமை சூரத் நகரில் 1 லட்சம் வியாபாரிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இது சம்பந்தமாக ஜவுளி தறி அதிபர் மகேந்திர ராவுலியா கூறும் போது, சூரத்தில் மட்டும் விசைத்தறி தொழிலில் 10 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். ஜி.எஸ்.டி. வரியால் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உற்பத்தி செய்யும் ஜவுளி பொருட்கள் எல்லாம் சாதாரண மக்களை சென்றடைபவை. 2 சக்கர வாகனங்களில் வைத்து ஊர், ஊராக விற்கும் வியாபாரிகள் இவற்றை வாங்கி செல்வார்கள். அதேபோல் சாதாரண கடைகளிலும் ஏழை மக்களை நம்பி இந்த பொருட்கள் விற்கப்படும்.

    ஆனால், தற்போது ஜி.எஸ்.டி. வரியால் 100 ரூபாய் சேலை ரூ.190 ஆக உயர்ந்து விட்டது. இதனால் எங்களுடைய வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளது.

    வியாபாரம் தான் எங்களுக்கு கடவுள். இதை பாதிக்க செய்த பா.ஜனதாவுக்கு இனியும் நாங்கள் ஏன் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

    இதேபோல் சூரத் நகரம் வைரம் பட்டை தீட்டும் தொழிலில் உலகத்திலேயே நம்பர்-1 இடமாக உள்ளது. இதில் 15 லட்சம் ஊழியர்கள் இருக்கின்றனர். 90 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மற்றும் சில வரிகளால் இந்த தொழில் இப்போது முடங்கி விட்டதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு மட்டும் ரூ.700 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வைர வியாபாரிகள் சங்க தலைவர் தினேஷ் நவேதியா கூறுகிறார்.

    இதுபற்றி மேலும் அவர் கூறும் போது, இங்கு பட்டை தீட்டப்படும் வைரங்களில் 96 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஜி.எஸ்.டி. வரியால் இதன் செலவு அதிகமாகி 20 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் பாதித்துள்ளது என்று கூறினார்.

    ஏற்கனவே பா.ஜனதா மீது அதிருப்தியில் இருந்த பட்டேல் சமூகத்தினருக்கு ஜி.எஸ்.டி. வரி அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

    எனவே, அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை செய்வதாக உறுதி அளித்துள்ளது.

    பட்டேல் சமூகத்தினர் ஏற்கனவே அதிருப்தியாக இருந்ததால் அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் கடந்த மாதம் 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சூரத் நகரில் பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார். ஆனாலும், அதற்கு பலன் அளிக்காத வகையில் ஜி.எஸ்.டி. வரி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் தடுக்க பா.ஜனதா பல்வேறு முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறது. இது, எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

    மாட்டு இறைச்சி போன்ற பிரச்சினைகளால் தலித் சமூகத்தினர் இப்போது பா.ஜனதா மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதுவும் தேர்தலை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×