search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 8,000 கோடி பண பரிமாற்றம்: லல்லு மகள் மிசா பாரதியிடம் 8 மணி நேரம் விசாரணை
    X

    ரூ. 8,000 கோடி பண பரிமாற்றம்: லல்லு மகள் மிசா பாரதியிடம் 8 மணி நேரம் விசாரணை

    லல்லு மகள் மிசாபாரதியிடம் ரூ.8,000 கோடி பண பரிமாற்றம் தொடர்பாக 8 மணி நேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
    புதுடெல்லி:

    ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மத்தியில் ரெயில்வே மந்திரியாக இருந்த போது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக லல்லு பிரசாத் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து அவரது வீடுகள் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக லல்லுவின் மகள் மிசா பாரதி அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோரிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். கடந்த 8-ந்தேதி டெல்லியில் உள்ள மிசாபாரதிக்கு சொந்தமான பண்ணை வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதில் ரூ.8,000 கோடிக்கு மிசாபாரதி சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    மிசாபாரதி மட்டும் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன்பு ஆஜரானார். கணவர் ஆஜராகவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக மிசா பாரதியிடம் அதிகாரிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.



    காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை தொடர்ந்து 8 மணி நேரம் நீடித்தது.

    மிசாபாரதி சில நிறுவனங்களில் பங்குதாராக உள்ளார். இது தொடர்பாகவும் கேள்விகள் கேட்டனர். டெல்லியைச் சேர்ந்த ஜெயின் சகோதரர்களான குமார் ஜெயின், வீரேந்திர ஜெயின் ஆகியோருக்கு சொந்தமான 90 ஷெல் கம்பெனிகளில் மிசா பாரதி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறையினரால் ஜெயின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து மிசாபாரதியின் ஆடிட்டர் ராஜேஷ் அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை விசாரணையால் லல்லு பிரசாத் குடும்பத்துக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×