search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகர்ரெட்டியை கடத்தி கொல்ல சதி திட்டம்: பாதுகாப்பு கேட்டு டெல்லி போலீசில் மனு
    X

    சேகர்ரெட்டியை கடத்தி கொல்ல சதி திட்டம்: பாதுகாப்பு கேட்டு டெல்லி போலீசில் மனு

    புழல் ஜெயில் கைதிகள் மூலம் தன்னை கடத்தி கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு டெல்லி போலீசாரிடம் சேகர் ரெட்டி மனுதாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர்களில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர், தொழில் அதிபர் சேகர்ரெட்டி.

    திருப்பதி தேவஸ்தானத்தின் உறுப்பினராகவும் இருந்த அவர் மணல் விற்பனையில் கொடி கட்டி பறந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் அடைந்த சில தினங்களில் சேகர்ரெட்டி பல்வேறு தொழில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த சோதனையில் ரூ.120 கோடி பணம் பிடிபட்டது. ஏராளமான தங்க, வைர நகைகளும் சிக்கின. வருமான வரித்துறையை மலைக்க வைக்கும் வகையில் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத ரொக்கப் பணம் இருந்தது.

    பிடிபட்ட பணத்தில் ரூ.33 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களில், அவ்வளவு தொகை எப்படி சேகர் ரெட்டியிடம் வந்தது என்று அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    ரூ.120 கோடி பணம் மற்றும் தங்கம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக தொழில் அதிபர் சேகர்ரெட்டி கைது செய்யப்பட்டார். பிறகு அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    ஆனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதே தவிர எந்தவித குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் 2 வழக்குகளிலும் ஜாமின் கேட்டதும், சென்னை ஐகோர்ட்டு அதை ஏற்று அவரை விடுவித்தது.

    ஜாமினில் விடுதலை ஆன சேகர்ரெட்டி டெல்லியில் நிபந்தனையின் பேரில் தங்கியுள்ளார். இந்த நிலையில் சேகர்ரெட்டியை கடத்தி சென்று படுகொலை செய்ய சிலர் ரகசிய சதி திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.

    பிரபலங்களை கடத்தி சென்று கொல்லும் உயர்ரக கிரிமினல் குற்றவாளிகள் இந்த சதி திட்டத்தை வகுத்தது தெரிய வந்துள்ளது. அந்த கிரிமினல்களில் சிலர் புழல் ஜெயிலில் இருப்பதும், சிலர் வெளியில் இருப்பதும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் உள்ள சில கொடுங்குற்றவாளிகளின் உரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்த அதிகாரிகள், சேகர்ரெட்டியை அவர்கள் கூட்டாளிகள் மூலம் தீர்த்து கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்தனர். இதுபற்றி அவர்கள் சேகர் ரெட்டிக்கு தகவல் தெரிவித்து மிகவும் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து தொழில் அதிபர் சேகர்ரெட்டி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மனு கொடுத்தார்.

    ஆனால் அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தொழில் அதிபர் சேகர்ரெட்டியை கடத்தி கொல்வதற்கு புழல் சிறையில் உள்ள சில குற்றவாளிகள் கடந்த சனிக்கிழமை வெளியில் உள்ள தங்கள் கூட்டாளிகளுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்ததை சிறை துறையினர் அறிந்தனர். இதையடுத்து சேகர்ரெட்டியை சிறைத்துறையினர் மீண்டும் உஷார்படுத்தினார்கள்.

    அதன் பேரில் சேகர் ரெட்டி மீண்டும் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவில் மனு கொடுத்தார். மத்திய, மாநில உள் துறைக்கும் அவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    அதில் அவர், "எனக்கு மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. எனவே எனக்கும், என் குடும்பத்துக்கும் உடனே உரிய பாதுகாப்பு தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    அவரது மனுவை ஏற்றுக் கொண்ட டெல்லி போலீசார் நேற்று முதல் கட்ட விசாரணையை தொடங்கினார்கள். அது போல தமிழக உள்துறை செயலாளரும், சேகர்ரெட்டியின் கோரிக்கை மனுவை டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்துள்ளார்.

    எனவே சேகர்ரெட்டிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்யப்படும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்படும் செலவுத் தொகையை தந்து விடுவதாக சேகர்ரெட்டி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சேகர்ரெட்டி உயிருக்கு புழல் சிறை கைதிகள் சிலர் குறி வைத்திருப்பதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சேகர்ரெட்டிக்கும் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மணல் விற்பனை மற்றும் டெண்டர்கள் எடுப்பதில் அவருக்கும் தமிழக அரசியல்வாதிகளும் பங்குதாரர்களாக உள்ளனர்.

    அவர் வீட்டில் பிடிபட்ட பல ஆவணங்கள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவர் கைதுக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சில அதிரடி சோதனைகளை வருமான வரித்துறை நடத்தியது.

    எனவே சேகர்ரெட்டி வாயைத் திறந்தால் தங்களுக்கு சிக்கலாகி விடும் என்ற பயத்தில் சிலர் அவரை தீர்த்துக் கட்ட புழல் சிறை கைதிகள் மூலம் முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தவிர சேகர்ரெட்டியை மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்துடன் இந்த சதி ஆலோசனையில் புழல் சிறையில் உள்ள கிரிமினல்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது. இதுபற்றி தமிழக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×