search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: பா.ஜ.க. கோரிக்கை
    X

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: பா.ஜ.க. கோரிக்கை

    மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    கொல்கத்தா:
     
    மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

    கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் மேற்கு வங்க அரசை உடனடியாக கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பெங்கால் பகுதி பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் கலவரத்தை அடக்க மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை உடனே அமலுக்கு கொண்டுவர வேண்டும்.

    இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். சிறுபான்மையின வாக்குகளை கவர்வதற்கான அரசியலில் மம்தா அரசு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த சம்பவமே இதற்கு உதாரணம். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், மேற்கு வங்கம் ஜிகாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறி உள்ளது’’ என தெரிவித்தார்.
    Next Story
    ×