search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி விழாவிற்கு அழைப்பே விடுக்காத போது எப்படி புறக்கணிப்பது?: நிதிஷ்குமார்
    X

    ஜி.எஸ்.டி விழாவிற்கு அழைப்பே விடுக்காத போது எப்படி புறக்கணிப்பது?: நிதிஷ்குமார்

    ஜி.எஸ்.டி. தொடக்கவிழாவில் பங்கேற்க தமக்கு அழைப்பே விடுக்கப்படாத போது, புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    நாடு முழுவது ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜி.எஸ்.டி அறிமுக விழாவிற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு சிறப்பு கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அம்மாநில அமைச்சர் ஒருவர் பங்கேற்றார்.

    ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்தார். நிதிஷ்குமார் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி அறிமுக விழாவை நிதிஷ்குமார் புறக்கணித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. தொடக்கவிழாவில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அழைப்பே விடுக்காத போது பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறினார்.
    Next Story
    ×