search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரவால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்- லாபம் அனைவருக்கும் கிடைக்கும்: ஆணையர் விளக்கம்
    X

    ஜி.எஸ்.டி. வரவால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்- லாபம் அனைவருக்கும் கிடைக்கும்: ஆணையர் விளக்கம்

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்படுவதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என்றும், அனைவருக்கும் லாபம் கிடைக்கும் என்றும் ஜி.எஸ்.டி. ஆணையர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நாளை நள்ளிரவு முதல் நாடு புதிய பாதையில் பயணிக்கப் போகிறது. அதாவது ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரி அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பு முறை பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது. இது மக்களுக்கு சுகம் அல்ல. சுமைதான் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் சில வியாபாரிகளின் வாதமாக முன்வைக்கப்படுகிறது.

    பொதுவாக வரி விதிப்பு முறையை படித்தவர்கள் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. எனவே சாதாரண மக்கள் புரிந்து கொள்வது சிரமம்தான். எனவேதான் மக்கள் மத்தியில் இதைப்பற்றி ஒருவித பீதியும், அச்ச உணர்வும் நிலவுகிறது.

    இதை தெளிவுபடுத்துவதற்காக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றி திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடியிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம்தான் இது:-

    ஜி.எஸ்.டி. என்பது நமது நாட்டுக்கு புதிது எதையும் புதிதாக கொண்டு வரும்போது இந்த மாதிரி உணர்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. ஆனால் உலகம் முழுவதும் 160 நாடுகளில் எல்லாம் இந்த வரி விதிப்பு முறை அமலில் இருக்கிறது. இதன் மூலம் அந்த நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. அந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் மூலம் கிடைத்த அனுபவத்தால்தான் நம் நாட்டிலும் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.

    இது ஒரு மாதம், ஒரு வருடத்தில் திட்டமிடப்பட்டு செயல்பாட்டுக்கு வரவில்லை. 10 வருடங்களுக்கும் மேலாக நிபுணர்கள், அதிகாரிகள், அரசுகள் பல தளங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் பிறகுதான் ஒரு வடிவத்துக்கு வந்திருக்கிறது.

    2005-ம் ஆண்டிலேயே ஜி.எஸ்.டி. பற்றி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. இது பற்றிய வெள்ளை அறிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் வெளியிட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இணைந்துதான் தயாரித்தது. இதன் பலனை இனிதான் நாட்டு மக்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

    ஜி.எஸ்.டி. வரி ஏன் வந்தது? அதனால் விளையப் போகும் நன்மைகள் என்ன? என்பதை இனி பார்ப்போம்.

    பொதுவாக ஒரு பொருளின் விலை என்பது அந்த பொருளின் தயாரிப்பு செலவும் வரியும் சேர்ந்ததுதான்.

    பொருள்களுக்கான வரிகளை மட்டும்தான் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் முடிவு செய்கின்றன. இதை தவிர மேலும் சில வரிகள் அந்த பொருளின் உற்பத்தி செலவுக்கு உள்ளே மறைமுகமாக அடங்கி இருக்கின்றன.


    உதாரணத்துக்கு ஒரு கார் டெல்லியில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கேயே மறைமுக வரியும், மத்திய அரசின் கலால் வரியும் உற்பத்தி செலவுடன் சேர்த்து அந்த காரை வெளியே கொண்டு வருகிறார்கள். மாநிலங்களை கடந்து செல்லும் போது அந்த காருக்கு மத்திய விற்பனை வரி, மாநிலங்களுக்கு இடையேயான வரி போடப்படுகிறது. தமிழ்நாட்டுக்குள் வரும்போது நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

    அதன்பிறகு டீலர் விற்பனை வரி போடுவார், மதிப்பு கூட்டு வரி போடப்படும். இவையெல்லாம் சேர்ந்துதான் வாங்குபவருக்கு கார் கிடைக்கும். எல்லா தயாரிப்புகளுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான் இருக்கிறது.

    ஆக, இப்போது மத்திய விற்பனை வரி, வரி மேல் வரி, நுழைவு வரி ஆகிய மூன்று விதமான வரிகளும் ஒழிக்கப்படுகிறது. காசு கொடுத்து ஒரு பொருளை வாங்குபவருக்கு அந்த பொருள் மதிப்பு கூட்டு வரியையும் தாண்டி உற்பத்தி விலைக்குள் மறைவாக இருக்கும் வரிகளும் ஒழிக்கப்படுகிறது. மறைமுக வரிகளை பொறுத்தவரை உற்பத்தி விலையில் 4 முதல் 5 சதவீதம் வரை இருக்கும். அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

    இந்த வரிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு ஒரே வரியாக வருவதால் உற்பத்தி விலை தானாகவே குறையும். உற்பத்தி பொருளின் மீதுதான் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. டீலர் இதுவரை விதித்த மதிப்பு கூட்டு வரியை இனி விதிக்க வேண்டியதில்லை.

    திருத்தி அமைக்கப்பட்ட உற்பத்தி விலையை வணிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது. அது மக்களை சென்றடைய வேண்டும் என்று ஜி.எஸ்.டி.யில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    வணிகர்கள் தயங்குவதற்கு காரணம் உற்பத்தி விலைக்கு உள்ளேயே மறைமுக வரிகள் இருந்தது. உற்பத்தி விலையை அவர்கள் இஷ்டத்துக்கு நிர்ணயிப்பார்கள்.


    ஒரு டீலராக இருப்பவர் சேவை தருபவர் அல்ல. ஆனால் பல வகைகளில் அவர் சேவை வரிகள் செலுத்தி இருப்பார். இதுவரை திரும்ப கிடைக்காத அந்த வரிகள் இனி அவருக்கு கிடைத்து விடுகிறது.

    இன்னொன்றை முக்கியமாக பார்க்க வேண்டும். எந்த பொருள் எவ்வளவு தயாரிக்கப்படுகிறது என்பது எந்த மாநிலத்துக்கும் தெரியாது. கலால் வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு மட்டும் தான் தெரியும். அதே போல் என்னென்ன தயாரிப்புகள் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு? விற்பனை ஆகிறது? விற்பனை வரி எவ்வளவு? என்பது மத்திய அரசுக்கு தெரியாது.

    இனி அவ்வாறு இருக்காது. தகவல் பரிமாற்றம் ஏற்படும். மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றாக இணைந்து நிர்வாகம் செய்யும்.

    ஒரு டி.வி. கம்பெனியை எடுத்து கொண்டால் எவ்வளவு தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலத்துக்கு எவ்வளவு அனுப்பப்பட்டுள்ளது? எந்த டீலருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது. அதை எந்தெந்த வாடிக்கையாளர் வாங்கியுள்ளனர் என்பது வரை மொத்த தகவலும் வெளிப்படையாக தெரிந்து விடும்.

    இந்த அளவுக்கு நுணுக்கமாக, துல்லியமாக கண்காணிக்கப்படுவதற்கு இளைய தலைமுறையைதான் பாராட்ட வேண்டும். அவர்களின் தகவல் தொழில் நுட்பம்தான் இந்த முழு வேலையையும் கண்காணித்து செய்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த இவ்வளவு தகவல் தொழில்நுட்பங்களை புகுத்தவில்லை. இந்த வி‌ஷயத்திலும் இந்தியா ஒருபடி மேலே உள்ளது.

    பான் எண்ணும் ஜி.எஸ்.டி.யில் இணைக்கப்படுகிறது. இதுவரை கடையில் 50 பொருள் இருந்தால் அதில் 10-ஐ பில் போடாமல் விற்று இருப்பார். 40 பொருளுக்கு மட்டும் வரி கட்டி இருப்பார். இனி அது முடியாது.

    அத்தியாவசிய பொருளான அரிசிக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளதே என்கிறீர்கள். அந்த எண்ணம் தவறு. ஒரு ஆலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட ரக அரிசி தயாராகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த அரிசியை மூட்டையில் எடுத்து சென்று சில்லரை விலைக்கு எடை போட்டு கொடுக்கும் போது வரி கிடையாது.


    அதையே பேக்கிங் செய்து ஏதோ ஒரு பிராண்ட் முத்திரையுடன் விற்பனைக்கு கொண்டு வரும்போதுதான் 5 சதவீத வரி செலுத்த வேண்டும்.

    ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரே ரக அரிசி மூட்டையில் சில்லரை விலைக்கு விற்கும் போது ரூ.28 என்று வைத்துக் கொள்வோம். அதே அரிசி பேக்கிங்கில் வந்தால் ரூ.38 ஆகி விடுகிறது. அதற்கு அவர்கள் என்ன விளக்கம் சொல்வார்கள் என்றால் பேக்கிங் கட்டணம், தரக்கட்டுப்பாடு செலவு என்பார்கள். ஒரே அரிசி மூட்டையில் இருந்தால் தரமாக இருக்காது என்ற நம்பிக்கையில்தான் வாடிக்கையாளர்கள் பேக்கிங் செய்யப்பட்டதை வாங்க நாட்டம் கொள்கிறார்கள்.

    இனி கலப்படமும் இருக்காது. கொள்முதல் விலையும் குறையும்.

    இன்னொன்று, தமிழகத்தில் விளையும் நெல் தமிழகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதில்லை. ஆந்திராவில் இருந்து பெருமளவில் இறக்குமதியாகிறது. இனி மாநில நுழைவு வரி என்பதெல்லாம் இல்லாமல் ஆகும் போது விலை குறைந்து தானே ஆக வேண்டும்.

    வியாபாரிகள் பயப்படுவது இதுவரை 500 மூட்டையை இருப்பு வைத்து விட்டு 100 மூட்டையைதான் இருப்பில் காட்டுவார்கள். இனி அப்படி செய்ய முடியாது. கள்ளத்தனமாக இருப்பு வைக்க முடியாது. கலப்படம் செய்ய முடியாது. தரம் குறைந்த பொருட்களையும் விற்க முடியாது.

    ஒரு உதாரணத்துக்கு ஒரு பிராண்டட் கம்பெனி சுவிட்சு வாங்குவோம். அந்த கம்பெனி தாக்கல் செய்துள்ள கணக்கில் இந்த ஆண்டு 5 ஆயிரம் சுவிட்சுகள் உற்பத்தி செய்ததாக இருக்கும். ஆனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கடைகளில் அதே பிராண்ட் சுவிட்சு 20 ஆயிரம் விற்பனையாகி இருக்கும். அது எப்படி வந்தது? ஒன்று அந்த கம்பெனி தனது தயாரிப்பு எண்ணிக்கையை குறைத்து கணக்கு காட்டியிருக்க வேண்டும். அல்லது அதே பிரண்டில் போலியாக தயாரித்து அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு விற்றிருப்பார்கள். இந்த மாதிரி செயல்கள் இனி தடுக்கப்படும்.

    மிகப்பிரமாண்டமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி ஒரு பொருள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடைசியில் யார் வாங்கினார்கள் என்பது வரை அத்தனை விவரங்களையும் சங்கிலி தொடர் போல் கணிப்பொறி பதிவு செய்து விடும். எங்காவது ஒரு தவறு நடந்தால் கூட அது எந்த இடத்தில் நடந்திருக்கிறது என்பதை கணிப்பொறி காட்டி கொடுத்து விடும்.

    இனி பொறி வைத்து யாரையும் பிடிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கும் இல்லை. வியாபாரிகளும் மறைக்க முயற்சிக்கவோ, அதற்கு அதிகாரிகள் துணை போகவோ முடியாது.

    நாட்டில் 80 சதவீத பொருட்கள் மிக மிக குறைந்த வரி அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டதாகத் தான் உள்ளது.

    ஆடம்பர பொருட்களுக்கு தான் 28 சதவீத வரி. ஒரு ஆடம்பர காரை எடுத்து கொண்டால் 10 வருடம் பயன்படும் என்று வைத்துக் கொள்வோம்.


    அதை வாங்கும்போது ஒரே ஒரு முறைதான் 28 சதவீதம் வரி கட்டப்படுகிறது. இன்னொன்று சாதாரண சாமானிய மக்கள் இந்த மாதிரி ஆடம்பர பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    வர்த்தகர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்பனை செய்வதற்கு வரி இல்லை. ரூ.75 லட்சம் வரை விற்றால் 2 சதவீத வரிதான். வரியையும் மிக எளிதாக நேரடியாக செலுத்தும் வசதி வணிகர்களுக்கு செய்து கொடுத்திருப்பதன் மூலம் மிகப்பெரிய சுமைகள் குறைக்கப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் வணிகர்கள் சிலர் பாதிப்பு என்று சொல்வதற்கு காரணம் அவர்கள் மனம் போல் இனி விலையை நிர்ணயிக்கவோ, லாபம் பார்க்கவோ முடியாது என்பதற்காகத்தான்.

    பல நேர்மையான வணிகர்கள் இதை வரவேற்கிறார்கள். பிரச்சனை இல்லாமல் வியாபாரம், தொழிலை செய்யலாம் என்று அவர்களே பாராட்டுகிறார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    இதுவரை சில தரப்புகளில் இருந்து வரும் வேண்டுகோள்கள் மற்றும் ஆதரவுகளுக்காக அரசியல் கட்சிகள் அவர்களுக்கு சாதகமாக சில மென்மையான போக்குகளை வளைந்தும், நெளிந்தும் கடைபிடித்து இருக்கும். இனி அதுவும் நடக்காது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து யாருக்கும் பாதகம் இல்லாமல் நடந்தாக வேண்டும்.

    ஆரம்ப கட்டத்தில் சில பொருட்கள் விலை உயர்வது போல் இருக்கும். சில மாதங்களில் எல்லாம் சீராகி விடும். கடந்த ஒரு ஆண்டாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்தான் இப்போது ஆங்காங்கே இருக்கும். இவை விற்று தீர்ந்து புது உற்பத்தி புழக்கத்துக்கு வரும்போது நிலைமை மாறி விடும்.

    இந்த வரி சீரமைப்பு என்பது உற்பத்தியாளர், விற்போர், வாங்குவோர் அனைவருக்கும் ஒரே சீரான பலனை தரும். ஒருவருக்கு பாதகம், இன்னொருவருக்கு சாதகம் என்பதற்கு இடம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×