search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் நடப்பது கொள்கை இடையிலான மோதல்: மீரா குமார் பேட்டி
    X

    ஜனாதிபதி தேர்தலில் நடப்பது கொள்கை இடையிலான மோதல்: மீரா குமார் பேட்டி

    ஜனாதிபதி தேர்தலில் தற்போது நடப்பது கொள்கை இடையிலான மோதல் என்று ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் கூறினார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் தற்போது நடப்பது கொள்கை இடையிலான மோதல் என்று ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் கூறினார்.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த மாதம் 17-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார்.

    ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக மீரா குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்து உள்ளன. இதற்காக அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொதுவான கொள்கை அடிப்படையில் ஒன்று சேர்ந்திருக்கின்றன.

    இதற்கு முன்பு நடந்த ஜனாதிபதி தேர்தலில் உயர் வகுப்பினர் போட்டியிட்டனர். அப்போது சாதி பாகுபாடு பற்றி யாரும் விவாதிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தலில் இரு தலித் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சாதி பற்றி பேசுகின்றனர்.

    எனவே தற்போது நடப்பது தலித்துகளுக்கு இடையோன மோதல் என மாற்ற வேண்டாம். இந்த தேர்தலில் கொள்கை இடையிலான மோதல் தான் நடக்கிறது. சமத்துவம், சமூக நீதியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஜனநாயக மாண்பு, வறுமை ஒழிப்பு, சாதி கட்டமைப்பு ஒழிப்பு, பத்திரிகை சுதந்திரம், வெளிப்படைத்தன்மை என்ற கொள்கை அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறேன்.

    அனைத்து எம்.பி., எம்.எல்.ஏக்களும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன். எனவே அனைவரும் ஒருமித்த கருத்துடன் என்னை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனினும் முடிவு அவர்களின் கையில் தான் உள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரிடம் ஆதரவு பெற முயற்சிப்போம்.

    பாராளுமன்ற சபாநாயகராக நான் இருந்த போது அனைத்து கட்சிகளையும் சமமாக தான் நடத்தினேன். 2013-ம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் பேசிய போது நான் அடிக்கடி குறுக்கிட்டதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. ஒருதலைபட்சமாக நான் நடந்து கொண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீரா குமார் இன்று (புதன்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதை தொடர்ந்து தனக்கு ஆதரவு கேட்டு 30-ந்தேதி சுற்றுப்பயணம் தொடங்குகிறார். அவர் குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×