search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப்பயணம்
    X

    கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப்பயணம்

    கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப்பயணம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு புதுச்சேரிக்கு செல்லும் வழியில் பெங்களூருக்கு வந்தார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் நிர்வாகிகள் அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய அவர், எடியூரப்பா மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமித்ஷா, “ஆதிதிராவிட மக்களை காங்கிரசார் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் மீது உண்மையான அக்கறை பா.ஜனதாவுக்கு மட்டுமே உள்ளது என்பதை எடுத்துக் கூறுங்கள். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த பணியை செய்யுங்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி, மக்கள் விரோத முடிவுகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்“ என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமித்ஷாவிடம் எடியூரப்பா எடுத்துக் கூறினார். மாநிலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொடர்பு சுற்றுப்பயண நிகழ்ச்சியில் மக்களை சந்தித்து பேசி வருவது குறித்தும் எடியூரப்பா கூறினார். இதை பாராட்டிய அமித்ஷா, சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், பேசும்போது எடியூரப்பா, கர்நாடகத்தில் சிறு விவசாயிகளின் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும், தேசிய வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்யுமாறு மத்திய அரசை நோக்கி கை காட்டுவதாகவும் கூறினார்.

    எடியூரப்பா கூறியதை பொறுமையாக கேட்ட அமித்ஷா, கட்சி நிர்வாகிகள் வீடுவீடாக சென்று, காங்கிரசின் தோல்விகள் மற்றும் மத்திய அரசின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறுமாறு அறிவுறுத்தினார். ஆட்சியில் இருந்து காங்கிரசை கீழே இறக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறினார். மேலும் தான் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் வருவதாகவும் தெரிவித்தார்.
    Next Story
    ×