search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு: உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் ரம்ஜான் நோன்பு திறப்பு
    X

    மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு: உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் ரம்ஜான் நோன்பு திறப்பு

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பை திறந்தது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
    பெங்களூர்:

    முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான்  மாதத்தில், ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருப்பார்கள். அதன்பின் மாலையில் சூரியன் மறைந்தபின் நோன்பு திறப்பது வழக்கம்.

    இந்நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் 150-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    விரதமிருந்த முஸ்லிம்கள் மாலையில் கோயில் வளாகத்தில் தங்கள் விரதத்தை முடித்தனர். அதை தொடர்ந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதுதொடர்பாக பெஜாவர் மட துறவி ஸ்ரீ விஷ்வ தீர்த்த சுவாமிகள் கூறுகையில், ’’உடுப்பி கோயில் வரலாற்றில் முதன்முறையாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், விரதமிருந்த இஸ்லாமியர்களுக்கு முறைப்படி விருந்து வழங்கப்பட்டது. விருந்து முடிந்ததும் அவர்கள் தொழுகை நடத்தினர். இது ஒன்றும் பெரிதல்ல. சிறிய சேவை தான். உடுப்பியில் வசிக்கும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட கால தொடர்பு உள்ளது.

    இந்த முயற்சியால் எனக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் செய்ய உள்ளேன். மேலும், இதேபோன்ற சேவையை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்’’ என தெரிவித்தார்.

    இந்த விருந்தில் பங்கேற்ற முஸ்லிம்களுக்கு சுவாமிகள் தனது கைகளால் பேரிச்சம்பழம் அளித்து மகிழ்ந்தார். மேலும், கோயில் சார்பில் வாழைப்பழங்கள், முந்திரிப்பருப்பு, ஆப்பிள்கள் மற்றும் தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது.

    சமீப காலமாக இந்துக்கள், முஸ்லிம்களிடையே மத மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நடந்த ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மத வேறுபாடின்றி அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.
    Next Story
    ×