search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை: திராவகம் ஊற்றி சேதப்படுத்தப்பட்ட புதிய கொடிமரம் சரிசெய்யப்பட்டது
    X

    சபரிமலை: திராவகம் ஊற்றி சேதப்படுத்தப்பட்ட புதிய கொடிமரம் சரிசெய்யப்பட்டது

    சபரிமலையில் திராவகம் ஊற்றி சேதப்படுத்தப்பட்ட புதிய கொடிமரம் சீர்செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சபரிமலை:

    கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 3.20 கோடி ரூபாய் செலவில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டு உள்ளது. இதற்கான பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. அதில் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்துக்கு புனித நீர் தெளித்து பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய கொடி மரத்துக்கு பலர் நவதானியங்கள் சேர்த்த புனித நீரை ஊற்றி வழிபட்டனர். இதற்கிடையே, பிற்பகல் 2 மணியளவில் பஞ்சவர்க தரைப்பகுதியில் பதிக்கப்பட்ட தங்க தகடுகள் வெண்மை நிறமாக மாற தொடங்கியது.

    இதைக்கண்ட தேவஸ்தான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று, கொடிமரத்தை சுற்றி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ படங்களை பரிசோதனை செய்தனர்.

    அதில் 3 பேர் பஞ்சவர்க தரை பகுதியில் தாங்கள் கொண்டு வந்த நீர் போன்ற ஒரு திராவகத்தை ஊற்றுவது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மூன்று பேரையும் போலீசார் பம்பை பஸ் நிலையத்தில் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாதரசம் வைக்கப்பட்டு இருந்த பாட்டிலும் கைப்பற்றப்பட்டது.

    இந்நிலையில், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், திராவகம் ஊற்றி பழுதான புதிய கொடிமரம் நேற்று இரவே சரிசெய்யப்பட்டு விட்டது. திராவகம் ஊற்றியவர்களிடம் நடத்திய விசாரணையில், புதிய கொடிமரத்தில் பாதரசம் ஊற்றி வணங்குவது அவர்களின் வழக்கம் என தெரிவித்துள்ளனர். இது உண்மையா என தெரியவில்லை. இதைதொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் கூறுகையில், “இந்த சதி செயலில் யார் யார் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் நோக்கம் என்ன என்பதை விரைவில் கண்டறிய வேண்டும். நடந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
    Next Story
    ×