search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய ஆபரேஷன் பிரஹார்: 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
    X

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய ஆபரேஷன் பிரஹார்: 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய ஆபரேஷன் பிரஹார் என்ற அதிரடி தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தொண்டமர்கா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி தாக்குதல் நடத்தப் போவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க ஆபரேஷன் பிரஹார் என்ற அதிரடி திட்டத்தை தொடங்கினர்.

    இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 12க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷனில் பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரி அவஸ்தி கூறுகையில், "மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கான 56 மணி நேர தேடுதல் வேட்டையை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கினோம். இதற்கு ஆபரேஷன் பிரஹார் என பெயரிடப்பட்டது.


    இந்த ஆபரேஷனில் ஆயிரத்து 500 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 12க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிக்கும் முயற்சியில் இது முதல் படி’’ என தெரிவித்துள்ளார்.

    மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 25 பேர் பலியாகினர். அதைதொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாவோயிஸ்டுகளை அழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×