search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் கோரிக்கை
    X

    ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் கோரிக்கை

    ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலன் கருதி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் வேண்டுகோள் விடுத்தார்.
    புதுடெல்லி:

    அடுத்த மாதம்(ஜூலை) 17-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்.

    காங்கிரஸ் தலைமையில் அமைந்த 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டு உள்ளார். மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இருவருமே பிரபலமான தலித் தலைவர்கள். இதனால் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து உள்ளது.

    இந்த நிலையில் தன்னை எதிர்க்கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுத்து இருப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்கு மீரா குமார் நேற்று நன்றி தெரிவித்தார்.

    ஜனாதிபதி தேர்தலை சித்தாந்தத்துக்கும் அதற்கு எதிரான, மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கும் இடையேயான போட்டி என்று வர்ணித்த அவர், “இந்த தேர்தல் நமது நாட்டின் செறிந்த மதிப்பு, கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மீது நடக்கும் தேர்தல். இவைதான் நாட்டின் சமூக நீதியும் ஆகும். மேலும், இது புனித தன்மையாக நாம் போற்றும் இந்திய பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது. எனவே இவற்றையெல்லாம் ஆராய்ந்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலனுக்காக எனக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.



    காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, மதசார்பற்ற கட்சிகளின் சிறந்த வேட்பாளர் மீரா குமார் தான். இந்த தேர்தல் சித்தாந்த மோதல் ஆகும். இதில் எந்த மாற்றமும் கிடையாது. மதசார்பற்ற சிந்தனை கொண்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, “இப்போதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளிடம் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த தேர்தலில் மிகவும் தீவிரமாக செயல்படவேண்டும். ஏனென்றால் இது அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான அடையாள யுத்தம்” என்று குறிப்பிட்டார்.

    ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் கூறுகையில், “ராம்நாத் கோவிந்தை காங்கிரசே ஆதரித்தாலும் கூட அவரை நான் கடுமையாக எதிர்ப்பேன். ஏனென்றால் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஆவார்” என்றார்.
    Next Story
    ×