search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு காச நோயாளிகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம்
    X

    அரசு மருத்துவ உதவிகளை பெறுவதற்கு காச நோயாளிகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம்

    மத்திய காச நோய் தடுப்பு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டத்தின் மூலம் பயன்பெறும் காச நோயாளிகள் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் காச நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 28 லட்சம் பேருக்கு காச நோய் இருப்பதாக 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது.

    காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பல்வேறு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இலவச தொடர் சிகிச்சை போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக மத்திய காச நோய் தடுப்பு திட்டம் என்ற பெயரில் மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் காச நோயாளிகள் இனி கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவு அரசு நாளிதழில் வெளியாக உள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை வைத்திருந்தால் மட்டும்தான் இந்த திட்டத்தின் மூலம் காசநோய் மருத்துவ உதவிகளை பெற முடியும்.



    இந்தியாவில் 28 லட்சம் பேருக்கு காசநோய் இருக்கிறது என்று இந்திய அரசு கூறி இருந்தாலும் உலக சுகாதார நிறுவனம் இதை விட அதிகமாக இந்தியாவில் காச நோய் இருக்கலாம் என்று கூறியுள்ளது.

    இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் 1 கோடியே 40 லட்சம் பேருக்கு காச நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. இது, உலக காச நோய் பாதிப்பில் 60 சதவீதம் ஆகும்.

    2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி இந்தியாவில் 1 லட்சம் பேரில் 217 பேருக்கு காச நோய் உள்ளது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் 127 பேருக்குதான் காச நோய் இருந்ததாக தெரிய வந்திருந்தது.

    Next Story
    ×