search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு
    X

    ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தள கட்சி இன்று தனது ஆதரவை அளித்துள்ளது.
    பாட்னா:

    ஜூலை 17- ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பா.ஜனதா கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன.

    பா.ஜனதாவை எதிர்த்து எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பொது வேட்பாளராக மீரா குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இதேபோல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், அணு விஞ்ஞானி அனில் ககோத்கர் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை ஏற்கனவே சிவசேனா கட்சி சிபாரிசு செய்து இருந்தது. பாரதிய ஜனதா அதை நிராகரித்து விட்டதால், அதிருப்தியில் இருக்கும் சிவசேனாவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்றும், தலித் வேட்பாளரை எதிர்த்து விவசாயிகளின் வேட்பாளர் என்ற பிரச்சாரத்தை முன் வைக்கலாம் என்றும் காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உள்பட 17 கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில்,  பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொது செயலாளர்  கே.சி.தியாகி தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.தியாகி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதா தள கட்சி தனது ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்தார்.

    ’கடந்த 22 மாதங்களாக பீகார் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த் சிறந்த முறையில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இதனால், ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எங்களின் முழுமையான ஆதரவை அளிப்போம்’ என குறிப்பிட்டார்.
    Next Story
    ×