search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்னோ: மோடி, ஆதித்யநாத் தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி: 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை
    X

    லக்னோ: மோடி, ஆதித்யநாத் தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி: 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.
    லக்னோ:

    உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் உதவுகிற யோகா கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். 



    மோடி, மாநில கவர்னர் ராம்நாயக், யோகி மற்றும் மந்திரிகள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தார்கள். இதை தொலைக் காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. யோகா நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.



    அதேபோல், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.கவின் ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுஜான்பூர்திராவிலும், சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரிலும், மனித வள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மணிப்பூரிலும், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு மும்பையிலும் நடக்கிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். 



    வங்காள விரிகுடா கடலில் உள்ள ஐ.என்.எஸ். ஜலஷ்வா மற்றும் ஐ.என்.எஸ். கிர்ச் ஆகிய கப்பல்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
    Next Story
    ×