search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க., தலித் வேட்பாளர்: காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு
    X

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க., தலித் வேட்பாளர்: காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க., தலித் வேட்பாளரை நிறுத்தியதால் காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலித் இன தலைவரான அவரது தேர்வு தேசிய அரசியலில் விறுவிறுப்பை உருவாக்கியுள்ளது.

    ராம்நாத் கோவிந்த்தை தேர்வு செய்திருப்பதை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் அணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளும் இதே கருத்தை வெளியிட்டுள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகள் அணியில் இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இரண்டும் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில் உள்ளன. இதனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி அணியை உடைக்க வேண்டும், 2019 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை அதிக அளவில் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் தலித் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது. பா.ஜ.க.வினர் எதிர் பார்த்தது போல காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் எதிர் கட்சிகள் நாளை மறுநாள் (22-ந்தேதி) டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளன. அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்பது தெரிந்து விடும்.

    மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார், அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் ஆகியோரில் ஒருவரை நிறுத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு 60 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. எனவே அவருக்கு எதிராக தலித் இனத்தவரை களம் இறக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×