search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவிக்காலத்தில் இறுதி முறை: 2 கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி
    X

    பதவிக்காலத்தில் இறுதி முறை: 2 கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி

    ஜனாதிபதி பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்யும் பிரணாப் முகர்ஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இறுதி முறையாக இரண்டு கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பல்வேறு கொடூரமான கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு மாநில ஐகோர்ட்டுகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டு மனுக்களையும், மேல் முறையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்வது வழக்கம்.

    இந்த மனுக்களின் மீதான சில விசாரணையில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதுண்டு. ஆனால், பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிப்படுத்தப்படும்.

    இவ்வாறு நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளிகளின் கடைசி சரணாலயமாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் நமது ஜனாதிபதியின் ஒற்றை கையொப்பம் இருந்து வருகிறது.

    இதனால், மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் இறுதி முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

    குற்றத்தின் தன்மை உள்ளிட்டவற்றை மிக கூர்மையாக ஆய்வு செய்து, இந்த கருணை மனுக்களை பரிசீலனை செய்யும் ஜனாதிபதி வெகு சிலரின் மரண தண்டனையை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பிப்பது உண்டு.

    அவ்வகையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்ட இரு கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார்.

    இவற்றில் ஒரு மனு கடந்த 2012-ம் ஆண்டில் நான்கு வயது குழந்தையை இருவர் சேர்ந்து கடத்திச் சென்று கற்பழித்து கொன்ற வழக்கு தொடர்பானது.

    மற்றொரு மனு கடந்த 2007-ம் ஆண்டு வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்ண மூன்றுபேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று, கற்பழித்துக் கொன்றது தொடர்பானது.

    இந்த இரு கருணை மனுக்களும் கடந்த மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் நிராகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

    ஜனாதிபதியாக தனது பதவிக்காலத்தில் பிரணாப் முகர்ஜி நிராகரித்த கடைசி கருணை மனுக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×