search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
    X

    சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித்குமார் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித்குமார் ஆகியோருக்கு டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர்கள் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

    இந்த வழக்கில் முதலில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். அவரது ஜாமீன் மனுவை நீதிபதி பூனம் சவுத்ரி இருமுறை தள்ளுபடி செய்துவிட்டார்.



    இதைத்தொடர்ந்து சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஜாமீன் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி எஸ்.முரளிதர் நேற்று விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பாராளுமன்ற மேல்-சபை உறுப்பினர் போலி அடையாள அட்டையை டெல்லி போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இது சாதாரண மோசடி கிடையாது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்படி போலியான அடையாள அட்டை வைத்திருப்பவர் பாராளுமன்ற வளாகத்துக்குள் மிகவும் எளிதாக பிரவேசிக்கலாம். இது பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆகும். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, கோவையைச் சேர்ந்த ராஜவேலு என்பவரிடம், டெண்டர் வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது மற்றொரு வழக்கு உள்ளது.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சுகேஷ் சந்திரசேகர் சார்பில் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அவருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி ராஜ்குமார், சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
    Next Story
    ×