search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை - மிருககாட்சி சாலையில் ஒப்படைப்பு
    X

    கண்ணூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை - மிருககாட்சி சாலையில் ஒப்படைப்பு

    கண்ணூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தையை மிருககாட்சி சாலையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாங்கோடு வனப் பகுதியையொட்டிய பகுதி கிராமங்கள் நிறைந்த இடமாகும். இங்குள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி காட்டு மிருகங்கள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடிய அந்த சிறுத்தை 3 வாரங்கள் அந்த பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கி வந்தது.

    இதை தொடர்ந்து வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அப்போது அந்த சிறுத்தை மிகவும் பலவீனமாக இருந்ததால் அது கூண்டில் அடைக்கப்பட்டு நெய்யாறு அணை பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு அந்த சிறுத்தைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக அந்த சிறுத்தை உடல்நலம் தேறியது. ஆனால் அந்த சிறுத்தையை காட்டில் விட்டால் வேட்டையாடி உணவு சாப்பிடுவதற்கு ஏற்ப அதன் உடல்நிலை ஏற்றதாக இல்லை என்பதை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அந்த சிறுத்தை பார்ப்பதற்கு வளர்ப்பு சிறுத்தை போல காட்சி அளித்தது. யாரோ அந்த சிறுத்தையை கூண்டில் அடைத்து வளர்த்துள்ளனர். அதன்பிறகு அதை காட்டுப் பகுதியில் விட்டுள்ளனர். வளர்ப்பு சிறுத்தை என்பதால் அது மனித வாடையை பிடித்து ஊருக்குள் வந்துள்ளது. எனவே அந்த சிறுத்தையை மீண்டும் காட்டுக்குள் விட்டாலும் அது கிராமங்களை தேடித்தான் வரும் என்பதால் அதை திருவனந்தபுரம் மிருககாட்சி சாலையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து நெய்யாற்றில் இருந்து கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை விசே‌ஷ வாகனம் மூலம் திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சில நாட்கள் பராமரிப்புக்கு பிறகு அந்த சிறுத்தை பொது மக்கள் பார்வைக்கு கூண்டில் அடைக்கப்படும்.
    Next Story
    ×