search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது - முக்கிய ஆயுதங்கள் சிக்கின
    X

    பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது - முக்கிய ஆயுதங்கள் சிக்கின

    பஞ்சாப்பில் 3 சீக்கிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களது தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து முக்கிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
    சண்டிகார்:

    பஞ்சாப்பில் 3 சீக்கிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களது தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து முக்கிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்புவது வாடிக்கையாகி வருகிறது.

    அந்த வகையில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு பயங்கரவாதிகளுக்கும் அது பயிற்சி அளித்திருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த குர்தியால் சிங், ஜக்ரூப் சிங், சத்விந்தர் சிங் ஆகிய 3 பேரும், ஐ.எஸ்.ஐ.யின் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் 3 பேரையும் அதிரடியாக பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இது முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

    இவர்களுக்கு பல்வேறு எதிர்ப்பு சக்திகள், சீக்கிய விரோத சக்திகள், தனிநபர்கள் மீது தாக்குதல்கள் நடத்துமாறு சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் லக்பிர் சிங் ரோட், ஹர்மீத் சிங் என்ற ஹேப்பி என்ற பி.எச்.டி., ஆகிய இருவரும் கட்டளையிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இப்போது 3 பேரையும் போலீசார் கைது செய்து விட்டதால் பயங்கரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் 21-ந் தேதி சர்வதேச எல்லையில் அமிர்தசரஸ் நகரில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தது சீக்கிய இளைஞர் கூட்டமைப்புதான் என தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வந்த மான் சிங், ஷெர் சிங் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    இது தொடர்பாக பஞ்சாப் போலீஸ் செய்தித்தொடர்பாளர் சண்டிகாரில் நேற்று கூறியதாவது:-

    கைது செய்யப்பட்டுள்ள குர்தியால் சிங் ஹோஷியார்புர் மாவட்டத்தை சேர்ந்தவர், ஜக்ரூப் சிங்கும், சத்விந்தர் சிங்கும் ஷாகீத் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்தும் கைத்துப்பாக்கி, துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    குர்தியால் சிங்கும், ஜக்ரூப் சிங்கும் அவர்களது வீட்டில் வைத்தும், சத்விந்தர் சிங் அவரது சொந்தக் கிராமத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகிலும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த 3 பேர் கும்பலுக்கு குர்தியால் சிங்தான் தலைவன். இவரை லாகூர் ராணுவ குடியிருப்பு பகுதியில் ஐ.எஸ்.ஐ.யினரால் தங்க வைக்கப்பட்டுள்ள லக்பிர் சிங் ரோட்டுக்கு ஜெர்மனியில் உள்ள பல்விர் சிங் சந்து அறிமுகம் செய்துள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்த போது இந்த லக்பிரை குர்தியால் சிங் பல முறை சந்தித்துப் பேசி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் சென்றபோது, ஜக்ரூப் சிங்குக்கு குர்தியால் சிங்தான் விசா ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

    ஜக்ரூப் சிங், பல்விர்சிங் சந்து மூலமாக லக்பிரையும், ஹர்மீத்தையும் சந்தித்து பேசி உள்ளார்.

    ஜக்ரூப் சிங் தன்னை கண்களைக் கட்டிய நிலையில் ஒரு ரகசிய இடத்தில் லக்பிரை சந்திக்க வைத்ததாகவும், ஏ.கே. 47 ரக துப்பாக்கியையும், சிறிய ரகங்களையும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து ஐ.எஸ்.ஐ. 4 நாட்கள் பயிற்சி அளித்ததாகவும் ஒப்புக்கொண்டார். ரெயில்வே தண்டவாளங்களில் நாசவேலைகளை நடத்தவும் அவருக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது.

    சத்விந்தர் சிங்கும் இந்த கும்பலில் ஒரு தீவிரமான உறுப்பினர்தான் இவர் ஜக்ரூப் சிங்குடன் சேர்ந்து பாகிஸ்தானில் தனது வழிகாட்டிகளை சந்தித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×