search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்தால் 100 சதவீதம் அபராதம்: வருமானவரித்துறை எச்சரிக்கை
    X

    வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்தால் 100 சதவீதம் அபராதம்: வருமானவரித்துறை எச்சரிக்கை

    வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தது.

    இதையடுத்து பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு அதற்கு பதில் புதிய ரூ.2000 நோட்டுகள் பொதுமக்கள் புழக்கத்துக்கு வினியோகிக்கப்பட்டன.

    இதனால் நாடு முழுவதும் மக்கள் வங்கிகளில் காத்துக் கிடந்து கடுமையாக அவதிப்பட்டனர். பல மாதங்களுக்கு பின்பு நிலைமை சீரானது. அதைத் தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுக்கவும், பணம் போடவும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

    மேலும் வங்கிகளில் பணம் போடப்படுவது மற்றும் எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகளை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது.

    அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு நிதி சட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    அதன்படி வருமானவரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் 269-எஸ்.டி. பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கு அளிப்பதற்கோ தடைவிதித்துள்ளது.

    எனவே ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக வருமானவரித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    வருமான வரிச்சட்டத்தின் 269-எஸ்.டி. பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை அபராதமாக விதிக்கப்படும்.

    அதே நேரத்தில் அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு இதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று ரூ.2 லட்சம் அல்லது அதை விட அதிக தொகையை ரொக்கமாக யாரேனும் பெறுவது குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால், அதை வருமான வரித்துறைக்கு மின்னஞ்சல் முகவரி மூலம் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டாலும், அது குறித்தும் மேற்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது ரூ.3 லட்சத்துக்கும் அதிக தொகையை ரொக்கமாக பரிவர்த்தனைக்கு தடைவிதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். எனினும் ரூ.3 லட்சம் என்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக பின்னர் குறைக்கப்பட்டது.

    வருமான வரித்துறையின் புதிய அறிவிப்பு பற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வங்கியில் ரொக்கமாக பணத்தை எடுக்கும்போது அதை நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யப்பட்டால் அபராதம் என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம்.

    ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்.

    இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமானவரித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும். சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றால் 100 சதவீதம் அபராதம் விதிக்கும்.

    ஒருவர் தினசரி ரூ.2 லட்சம் வங்கியில் இருந்து எடுப்பது அல்லது வங்கியில் செலுத்துவது சாதாரணமானதல்ல. அது பெரிய அளவில் வருமானம் ஈட்டும் தொழில் மூலம்தான் முடியும். எனவே அந்த மாதிரி பரிவர்த்தனைகளை வருமானவரித்துறை நிச்சயம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×