search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசின் தவறான முடிவால் பொருளாதார வீழ்ச்சி - ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு
    X

    மோடி அரசின் தவறான முடிவால் பொருளாதார வீழ்ச்சி - ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு

    மோடி அரசின் தவறான முடிவு ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொருளாதார வீழ்ச்சி ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

    அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.

    இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையே காரணம் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து:-

    ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதனால் ‘உலகில் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடு’ என்ற அந்தஸ்தை இந்தியா இழந்தது.

    வீழ்ச்சியடைந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம். இந்த அடிப்படைத் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, மத்திய அரசு புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே வருகிறது.

    ப.சிதம்பரம் இதுகுறித்து தனது கட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திக்கும் என்ற தனது கணிப்பு தற்போது உண்மையாகி விட்டது.


    பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரும்பப் பெற்றது. இதன் காரணமாக, 2016-17 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (ஜனவரி- மார்ச்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.1 சதவீதமாக குறைந்தது. இது, மூன்றாம் காலாண்டில் 7 சதவீதமாக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.

    மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 முதல் 1.5 சதவீதம் வரை சரியும் என அப்போதே நான் கணித்து தெரிவித்தேன். அது, தற்போது நிஜமாகி விட்டது. 2016-ம் ஆண்டிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இதனை மேலும் மோசமாக்கி விட்டது.

    மேற்கு வங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை தொடக்கம் முதலே நான் எதிர்த்து வந்தேன். அந்த நடவடிக்கையால் வேலை வாய்ப்பு, உற்பத்தி ஆகியவை வீழ்ச்சியடையும் என்று அச்சம் தெரிவித்து வந்தேன்.


    எனது கணிப்பு தற்போது சரியாகிவிட்டது. கடந்த நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே கால கட்டத்தில் இது 7.9 சதவீதமாக இருந்தது. அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ஏறத்தாழ 2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

    நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதலபாதாளத்தை நோக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விவசாயமும், அமைப்பு சாரா தொழில்களும் நலிந்துவிட்டன.

    நாட்டு மக்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

    எதிர் கட்சிகளில் குற்றச் சாட்டுக்கு மத்திய மந்திரி அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதற்கும், கடந்த ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    அதற்கு சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே, மொத்த உள்நாட்டு உற்பத்தி இறங்குமுகத்தில் தான் இருந்து வந்தது. 7 முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சி விகிதம் என்பது, சர்வதேச அளவில் மிகச் சிறந்ததும், இந்திய அளவில் மிக நியாயமானதும் ஆகும்.

    வங்கிகளில் வாராக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதும், தனியார் துறையில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதும் அரசின் முன் உள்ள முக்கியமான சவால்களாகும்.

    நட்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்து ஏற்கனவே நீதி ஆயோக் தனது பரிந்துரைகளை வழங்கிவிட்டது. இந்த விவகாரம் குறித்து பொது விமானப் போக்குவரத்துத் துறைதான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×