search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கள்ளநோட்டு அச்சடித்த சேலம் தம்பதி கைது
    X

    கேரளாவில் கள்ளநோட்டு அச்சடித்த சேலம் தம்பதி கைது

    கேரளாவில் கள்ளநோட்டு அச்சடித்த சேலம் தம்பதியினரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீப காலமாக கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்து உள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. குறிப்பாக புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அதிகளவு மாற்றப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

    இதை தொடர்ந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுபவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். மேலும் கடைக்காரர்களை இது தொடர்பாக உஷார்படுத்திய போலீசார் கள்ளநோட்டுக்களை யாராவது மாற்றினால் அதுபற்றி தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறி இருந்தனர்.

    கேரள மாநிலம் கண்ணூர் அருகே மண்ணூத்து என்ற இடத்தில் ஒரு மளிகை கடையில் பொருள் வாங்கிய பெண் ஒருவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், அதை சரிபார்த்தபோது, அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது.

    இதுபற்றி அவர், கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்படுவது தெரிய வந்தது.

    கள்ளநோட்டை மாற்றிய அந்த பெண்ணின் பெயர் நிர்மலா (வயது 38). அவரது கணவர் முருகேசன் (41). இவர்கள் இருவரும் சேலம் கணபதி நகரைச் சேர்ந்தவர்கள். கண்ணூரில் வாடகைக்கு வீடு எடுத்து இங்கு கள்ளநோட்டுக்களை எந்திரம் மூலம் அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது.

    இவர்களுக்கு உறவினரான வெங்கடாசலம் (58) என்பவரும் உதவியது விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து முருகேசன், வெங்கடாசலத்தையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் வீட்டில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும், கட்டு கட்டாக புதிய 500 ரூபாய் நோட்டுக்களையும், 100 ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் கள்ளநோட்டை கைமாற்ற பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னணியில் உள்ள கள்ளநோட்டு கும்பல் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×