search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக புகழ்பெற்ற ஜோக் அருவியில் செயற்கை நீர்வீழ்ச்சி திட்டத்துக்கு இடைக்கால தடை
    X

    உலக புகழ்பெற்ற ஜோக் அருவியில் செயற்கை நீர்வீழ்ச்சி திட்டத்துக்கு இடைக்கால தடை

    உலக புகழ்பெற்ற ஜோக் அருவியில் செயற்கை முறையில் நிரந்தரமாக தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா ‘மலை நாடு‘ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படுகிறது. மலைப்பிரதேசமான சிவமொக்காவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முதன்மையானது ஜோக் அருவியாகும்.

    இது கர்நாடகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சென்று அங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இங்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    உலக புகழ்பெற்ற ஜோக் அருவியில் சுமார் 800 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதைத்தவிர ஜோக் அருவியில் ‌‌ஷராவதி மின் உற்பத்தி நிலையமும் அமைந்துள்ளது. லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ‌‌ஷராவதி மின் உற்பத்தி நிலையத்துக்கு வந்த பிறகு தான் ஜோக் அருவிக்கு வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக, ஜோக் அருவியிலும் போதிய அளவு தண்ணீர் விழவில்லை. தற்போது ஜோக் அருவி வறண்டு போய் காணப்படுகிறது. வறண்டு போய் கிடக்கும் பாறைகளை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஜோக் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஜோக் அருவியில் ஆண்டு முழுவதும் நிரந்தரமாக தண்ணீர் விழ வைப்பதற்காக புதிய திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இயற்கை கைவிட்டதால், செயற்கை முறையில் அதனை சாத்தியப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அதாவது, ஜோக் அருவி அருகே உள்ள சீதாகட்டே பகுதியில் உள்ள 347 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, அங்கு புதிதாக ஒரு அணை அமைக்கப்படும். ஜோக் அருவியில் கொட்டும் தண்ணீர், அந்த அணைக்கு வரும்.

    பின்னர் அந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீரை பாறைகளை குடைந்து ராட்சத குழாய்கள் அமைத்து மறுபடியும் மேலே கொண்டு சென்று மீண்டும் ஜோக் அருவியில் தண்ணீர் கொட்டும்படி செய்வதே அந்த திட்டமாகும். இதில் இன்னொரு பயன் என்னவென்றால், அந்த தண்ணீர் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இதனால் மாநிலத்தில் மின் தட்டுப்பாடு நீங்கும். இந்த திட்டத்திற்காக ரூ.408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    செயற்கை முறையில் நிரந்தரமாக ஜோக் அருவியில் தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சுற்றுலா துறை ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையமும் ஜோக் அருவி பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.

    இந்த திட்டத்தை டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனமும் அதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து கர்நாடக சுற்றுலாத்துறையிடம் சமர்ப்பித்தது. இதனை ஆய்வு செய்த கர்நாடக சுற்றுலாத்துறை, பணியை தொடங்க தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதனால் பணிகள் தொடங்கும் தருவாயில் இருந்தன.

    இந்த நிலையில், ஜோக் அருவியை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிதாக அணை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றி சீதாகட்டே, வடனபைலு, படன்பைலு, ஜோகினமடா, ஹொனகோடு, கிளகுந்தி, இடுவாணி, கானுதோட்டா, தாரிபாகிலு ஆகிய கிராமங்கள் உள்ளன. சீதா கட்டே பகுதியில் 347 ஏக்கர் பரப்பளவில் அணை அமைத்தால் இந்த கிராமங்கள் அனைத்தும் அந்த அணையில் மூழ்கும் நிலை உள்ளது.

    ஏற்கனவே ஜோக் நீர் வீழ்ச்சியில் வெள்ளம் வந்த போது அந்த கிராமங்கள் அருகே இருந்த மற்றும் சில கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அங்கு அணை அமைத்தால் தங்களுக்கும் அதே கதி தான் ஏற்படும் என்று அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பயத்தில் உள்ளனர்.

    இதனால் இந்த திட்டத்தை பரிசீலனை செய்த மத்திய சுற்றுச்சூழல் துறை, ஜோக் அருவியில் செயற்கை முறையில் நிரந்தரமாக தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான நகலை மாநில அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதனால், இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் இந்த திட்டத்தில் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைத்துள்ளது.
    Next Story
    ×