search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்‌ஷாக்காரர் ரவீந்தர்குமார்.
    X
    ரிக்‌ஷாக்காரர் ரவீந்தர்குமார்.

    டெல்லி சாலையில் சிறுநீர் கழித்தவரை தடுத்த ரிக்‌ஷாக்காரர் அடித்துக்கொலை

    டெல்லியில் சாலையில் சிறுநீர் கழிக்கக் கூடாது என கண்டித்த ரிக்‌ஷாகாரரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்தவர் ரவீந்தர்குமார் (34). இவர் இ-ரிக்‌ஷா (எலெக்ட்ரிக் ரிக்‌ஷா) டிரைவர். தூய்மை இந்தியா திட்டத்தில் தீவிரமாக பணியாற்றினார்.

    இவரது இ-ரிக்‌ஷா நிறுத்தம் வடக்கு டெல்லியின் முகர்ஜி நகரில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர் இ-ரிக்‌ஷா நிறுத்தத்தில் இருந்தார்.

    அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இ-ரிக்‌ஷா நிறுத்தும் இடம் அருகே ரோட்டில் சிறுநீர் கழித்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய ரவீந்தர் குமார், இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது என்று கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரவீந்தர் குமாரை மிரட்டி விட்டு சென்றனர். பின்னர் பெரிய கும்பலுடன் 20 நிமிடங்கள் கழித்து வந்தனர். அவர்கள் துண்டுகளில் கற்களை நிரப்பி ரவிந்தர்குமாரை அடித்து உதைத்தனர்.

    இச்சம்பவம் இரவு 8.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நடந்தது. இதற்கிடையே படுகாயம் அடைந்த ரவீந்தர்குமாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து டெல்லி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் கமி‌ஷனர் மிலிந்த் மகாதியோ தும்பர் விசாரணை நடத்தி வருகிறார்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் ரவீந்தர் குமாரை தாக்கியது 12 முதல 13 இளைஞர்கள் கும்பல் என தெரிய வந்தது. அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மற்றவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இ-ரிக்ஷா ஓட்டுனர் ரவீந்தர் குமார் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி போலீஸ் கமி‌ஷனரை அவர் வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×