search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க தெலுங்கு தேச கட்சி மாநாட்டில் தீர்மானம்
    X

    என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க தெலுங்கு தேச கட்சி மாநாட்டில் தீர்மானம்

    என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என்று கோரி தெலுங்கு தேச கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    விசாகப்பட்டினம் :

    பழம்பெரும் நடிகரான என்.டி.ராமாராவ் 1982-ம் ஆண்டு முதல் ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். தெலுங்கு தேசம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கிய அவர், கட்சி தொடங்கிய 9 மாத காலத்திலேயே ஆட்சியை பிடித்தார். ஆந்திராவில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்து உள்ளார்.

    இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியில் என்.டி.ராமாராவின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    என்.டி.ராமாராவின் பிறந்தநாளையொட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேச கட்சியின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் என்.டி.ராமாராவுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

    அப்போது பேசிய அவர் “மறைந்த தலைவர் என்.டி.ராமாராவ், இந்திய அரசியலில் புரட்சியை கொண்டு வந்தவர். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். இந்திய திரைத்துறையில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இதனால், குடிமக்களுக்கு வழங்கக்கூடிய உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெறுவதற்கு அவர் தகுதி உடையவர் ஆவார்” என கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், “அரசியலில் வரலாறு படைத்த என்.டி.ராமாராவ், ஏழை மக்களின் நல்வாழ்விற்காக புதுமையான திட்டங்களை கொண்டு வந்தவர். இதனால் அவரது பெயர் தெலுங்கு மக்களிடம் என்றென்றும் நிலைத்திருக்கும்” என புகழாரம் சூட்டினார்.

    இந்த தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக மாநிலம் முழுவதும் என்.டி.ராமாராவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.
    Next Story
    ×