search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் - உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல்
    X

    இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் - உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல்

    இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.

    கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

    உலகில் முதல்முறையாக ’ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மிகவும் முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாக ஐதராபாத் ஆய்வு விஞ்ஞானிகள், உலகில் முதல் முறையாக ‘ஜிகா’ வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×