search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி: போலீசார் விசாரணை
    X

    அசாமில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி: போலீசார் விசாரணை

    பிரதமர் நரேந்திரமோடி இன்று அசாம் செல்ல உள்ள நிலையில், அங்கு மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார்.
    கவுகாத்தி:

    பிரதமர் நரேந்திரமோடி இன்று அசாம் செல்ல உள்ள நிலையில், அங்கு மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். இது மோடி பயணத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் செய்த சதி திட்டமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது தாலா-சதியா இடையே நாட்டிலேயே மிகப்பெரிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று அசாம் செல்கிறார்.

    மேலும், சங்சாரி என்ற இடத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். பிரதமர் வருகையையொட்டி அசாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் திப்ருகார் மாவட்டம் திகோ என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம பொருள் வெடித்தது. இதில் மர்மநபர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    எண்ணெய் திருடும்போது இந்த சம்பவம் நடந்ததா? அல்லது பயங்கரவாதிகள் யாரும் பிரதமர் வருகையை சீர்குலைக்கும் வகையில் சதி திட்டத்தில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் வருகையை கண்டித்தும், பிரதமர் திறந்து வைக்க உள்ள பாலத்தை கடந்த 22-ந்தேதி பார்வையிட சென்ற முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்தும் நேற்று இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனையை ராகா பகுதியில் அமைக்கக்கோரி அந்தப்பகுதி மக்கள் நேற்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்து உள்ளனர். 
    Next Story
    ×