search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறட்சியை சமாளிக்க மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழை
    X

    வறட்சியை சமாளிக்க மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழை

    வறட்சியை சமாளிக்க மராட்டிய மாநிலத்தில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பல திட்டங்களை தீட்டியுள்ளது.

    அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகம் நாட்டில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தை நடப்பு பருவ மழை காலத்தில் மராட்டியத்தில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



    இத்தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். செயற்கை மழை குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எம். ராஜீவன் கூறியதாவது:-

    செயற்கை மழை பெய்விக்க மராட்டிய மாநிலம் சோலாப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அங்கு மழை மேகங்களை உருவாக்குவதற்காக 200 மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.

    இதற்காக 2 ஆய்வு விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு விமானம் மழை மேகம் உருவாக்கும் பணியை மேற்கொள்ளும், மற்றொன்று மழை மேகத்தை உருவாக்கும் பகுதிக்கான மாதிரியை எடுக்க பயன்படுத்தப்படும்.

    வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின் துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்தூகள்களாக மாறி மழையாக பொழியும்.

    சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற செயற்கை மழை பொழிய செய்துள்ளனர். இத்திட்டம் புனேயில் உள்ள இந்திய தட்பவெப்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் சோலாபூரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் வறட்சி நிலவும் மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
    Next Story
    ×