search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தொடரும் சம்பவம்: 4 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்கள்
    X

    கேரளாவில் தொடரும் சம்பவம்: 4 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

    கேரளாவில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த 4 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாக உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    காசர்கோடு, கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

    இந்த தெருநாய்கள் சாலைகளில் செல்லும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதனால் நாய்கடி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் நாய்கடிக்கு உள்ளான பொதுமக்கள் பலியான சோக சம்பவங்களும் நடந்து உள்ளது.

    கடந்த 10 மாதத்தில் மட்டும் ஒரு பெண் உள்பட 4 பேர் தெரு நாய்கள் கூட்டத்தால் கடிக்கப்பட்டு பலியாகி உள்ளனர்.

    சமீபத்தில் திருவனந்தபுரம் பகுதியில் ஒரு முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிர் இழந்தார். இந்த சோகத்தின் சுவடு மறைவதற்குள் 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.

    திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரஜிஷ்- மினி தம்பதியின் மகள் அஷ்டமி (வயது4). தனது பாட்டியுடன் வீட்டு முன்பு அஷ்டமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறின. இதில் அவரது முகம், கழுத்து பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.இதைபார்த்ததும் அவரது பாட்டி அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு தடிகளால் நாய்களை அடித்து விரட்டி சிறுமி அஷ்டமியை மீட்டனர்.

    உடனடியாக அவரை அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் கிடைத்ததும் அந்த சிறுமியின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் தெரு நாய்களை பிடித்து கொல்லும் படி அரசை வற்புறுத்தி சாலை மறியல் பேராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை சமரசப்படுத்தி கலைந்து செல்லும்படி கூறினார்கள்.

    கடந்த 2016 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2017 ஜனவரி 31-ந்தேதி வரையிலான 10 மாதத்தில் மட்டும் கேரளாவில் நாய்கடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 914 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மாநிலத்திலேயே அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 21 ஆயிரத்து 563 பேரும், குறைந்த பட்சமாக காசர்கோட்டில் 2 ஆயிரத்து 744 பேரும் நாய்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் பெருகி வரும் வெறிநாய்கள் அட்ட காசத்தை ஒழிக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
    Next Story
    ×