search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒழிப்பு: கரும்புக்கான குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்வு
    X

    அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒழிப்பு: கரும்புக்கான குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்வு

    கரும்புக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தை ஒழிக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கரும்புக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தை ஒழிக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.

    மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், “சர்க்கரை ஆலைகளின் நிலை மேம்பட்டுள்ளது. 2017-18 ஆண்டில், கரும்புக்கான நியாயமான, லாபகரமான விலை (சட்டப்படியான குறைந்தபட்ச விலை) குவிண்டாலுக்கு ரூ.25 உயர்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை வழங்கியது. இதையடுத்து கரும்பு கொள்முதல் விலை ரூ.230-ல் இருந்து ரூ.255 ஆக உயர்கிறது. இது தற்போதைய அளவை விட 10.6 சதவீதம் அதிகம் ஆகும்” என கூறினார்.

    விவசாய செலவுகள், விலைகள் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    கரும்பு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதையும், நல்ல சர்க்கரை விலை காரணமாக கூடுதல் விலை கொடுக்கிற திறனை சர்க்கரை ஆலை அதிபர்கள் கொண்டிருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

    அன்னிய முதலீடுகளுக்கான அனுமதியை வழங்குவதற்கு அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் (எப்.ஐ.பி.பி.), 1990-களின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. தாராளமய பொருளாதாரத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இந்த வாரியம், பிரதமர் அலுவலகத்தின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந்த வாரியத்தை ஒழித்துக்கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.

    இதற்குப் பதிலாக இனி சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள், மத்திய மந்திரிசபை அங்கீகரிக்கும் நிலையான இயக்க நடைமுறையின்படி அன்னிய முதலீடு அனுமதிகளை வழங்கும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

    அதே நேரத்தில் முக்கியமான துறைகளில், உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோன்று ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேலான நேரடி அன்னிய முதலீடு திட்டங்களில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுஅனுமதி வழங்குவது தொடரும் என்றும் அவர் கூறினார்.

    தற்போது அன்னிய முதலீடு வாரியத்தில் அனுமதிக்காக நிலுவையில் உள்ள திட்டங்களைப் பொறுத்தமட்டில், அவை சம்மந்தப்பட்ட துறை அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை ‘மேக் இன் இந்தியா’ என்னும் பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் தயாரித்து வழங்க தனியார் துறையினர் ஊக்குவிக்கப்படுவர்.

    இதற்கான அனுமதியையும் மத்திய மந்திரிசபை அளித்தது. 
    Next Story
    ×