search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1,000 கோடி பினாமி நில பேர விவகாரம்: லாலு மகள், மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்
    X

    ரூ.1,000 கோடி பினாமி நில பேர விவகாரம்: லாலு மகள், மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்

    ரூ.1,000 கோடி பினாமி நில பேர விவகாரம் தொடர்பாக, லாலுபிரசாத் யாதவ் மகளுக்கும், மருமகனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    ரூ.1,000 கோடி பினாமி நில பேர விவகாரம் தொடர்பாக, லாலுபிரசாத் யாதவ் மகளுக்கும், மருமகனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருக்கிறார். பல்வேறு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். பினாமி பெயர்களில் அவர் ரூ.1,000 கோடி அளவுக்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதாக புகார் எழுந்தது.

    அதனால், கடந்த 16-ந் தேதி மிசா பாரதி சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. அதையடுத்து, மிசா பாரதிக்கு பினாமி சொத்து பரிமாற்றத்துக்கு உதவியதாக அவருடைய ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால் கடந்த 22-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், லாலு மகள் மிசா பாரதிக்கும், மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமாருக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரம், டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமையகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

    ரூ.1,000 கோடி பினாமி நில பேரம் குறித்தும், வரி ஏய்ப்பு குறித்தும் மிசா பாரதியிடமும், அவருடைய கணவரிடமும் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    லாலு மகள் மீதான வழக்கில், வருமான வரித்துறை சட்டத்தை மட்டுமின்றி, புதிதாக இயற்றப்பட்ட பினாமி பரிமாற்ற தடை சட்டத்தையும் பிரயோகிக்க போவதாக வருமான வரித்துறை ஏற்கனவே கூறியுள்ளது. இச்சட்டப்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். 
    Next Story
    ×