search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஹாரன்பூரில் தொடரும் பதற்றம்: புதிய வன்முறையில் தலித் வாலிபர் பலி - 24 பேர் கைது
    X

    சஹாரன்பூரில் தொடரும் பதற்றம்: புதிய வன்முறையில் தலித் வாலிபர் பலி - 24 பேர் கைது

    உத்தரபிரதேசம் மாநில சஹாரன்புர் நகரில் இருசமூகத்தினரிடையே நடைபெற்ற வன்முறை காரணமாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. புதிய வன்முறையில் ஒரு தலித் வாலிபர் உயிரிழந்தார். 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம், சஹாரன்பூரில் மே 5-ம் தேதி உயர் சமூகத்தினரான தாக்குர் மக்கள் நடத்திய பேரணியின் போது ஒலிபெருக்கி மிகவும் சத்தமாக ஒலிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி தலித் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக வெடித்தது.

    இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியானார். 15-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சஹாரன்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதனையடுத்து, சஹாரன்பூர் நகரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21-ம் தேதி தலித் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தலித்கள் பங்கேற்றனர். 

    இந்நிலையில், தொடர் பதற்றம் காரணமாக சஹாரன்பூர் நகரில் நேற்று புதிய வன்முறை வெடித்தது. இதில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, ஷப்பிர்பூர் கிராமத்தில் தாக்கூர் மக்கள் உள்ள பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் தீ வைத்தனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வருகை தரவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. தகவல் அறிந்து உடனடியாக மாவட்ட நீதிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாக்கூர் மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதனையடுத்து, மாயாவதி பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குக் சென்று பார்வையிட்டார். அவர்களிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும், இந்த வன்முறை சம்பவங்களுக்கு முதல்வர் யோகி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.



    மாயாவதி சென்ற பின்னர், வாள் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள் சென்ற கார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் சர்சவா நகரைச் சேர்ந்த 24 வயது தலித் வாலிபர் கொல்லப்பட்டார். காயம் அடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



    இந்த சம்பவம் பரவியதை தொடர்ந்து சஹாரன்பூர் நகர் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது. சில இடங்களில் கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதனையடுத்து வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துமாறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×